Type Here to Get Search Results !

மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி என தகவல்….!

கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பது கரும்பூஞ்சை நோய். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு Black Fungus எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது.
பொதுவாக கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள் மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர்.
இவ்வகை கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது.
சென்னை மற்றும் தமிழகத்தில் வெகு சில இடங்களில் அரிதாக காணப்பட்டு வந்த இந்த பாதிப்பு , தற்போது நாடு முழுக்க கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயது வெல்டிங் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது தெரியவந்தது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதனிடையே மதுரையில் இதுவரை 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு 10 பேருக்கு ஏற்படும் கரும்பூஞ்சை பாதிப்பு தற்போது வாரம் 10 பேர் என பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு பின்னர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கருப்பு பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது என மதுரை அரவிந்த மருத்துவமனை கண் மருத்துவர் உஷா கிம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.