Type Here to Get Search Results !

எது உண்மையான அட்சய திருதியை….? அட்சய என்றால் என்ன…?

 

அட்சய என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை மே 14ஆம் தேதி அட்சயதிருதியை நாள் கொண்டாடப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை மக்களுக்கு அட்சய திருதியை நாளைப் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது. ஆனால் யாரோ ஒரு புத்திசாலி வியாபாரி தனது வியாபாரம் செழிக்க இந்த நாளில் தங்கம் வாங்கினால் வருடம் முழுக்க தங்கம் வளரும் என்று விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்ததன் விளைவு,இன்று மொபைலின் இன்பாக்ஸ் நிறையும் அளவிற்கு அட்சய திருதியை சலுகை விளம்பரங்கள் குவிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாள் கடன் வாங்கி,கஷ்டப்பட்டு,கால் கடுக்க வரிசையில் நின்று தங்கம் வாங்குவதற்கான நாள் அல்ல.

அட்சய திருதியை என்பதற்கான உண்மையான பொருளை உணர்ந்துக் கொள்ளாமல் ,அன்று தங்கம் வாங்குவதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட நாளாக மாறியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

அப்படியென்றால் உண்மையில் அட்சய திருதியை என்றால் என்ன?. நம் புராணங்களும் இந்த நாளைக் குறித்து என்னதான் சொல்கிறது.

அட்சய என்றால், அழிவின்றி வளர்வது என்பது பொருள். சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்வரும் மூன்றாம் பிறை நாள் தான் அட்சய திருதியை. அன்று துவங்கும் பணிகளும் , வாங்கும் பொருட்களும் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.

எது உண்மையான அட்சய திருதியை?

அனைத்துலகையும் படைத்த படைப்பு கடவுள் பிரம்மா தனது படைப்புத்தொழிலை – அதாவது உயிர்களை உருவாக்கும் தொழிலை துவக்கியது சித்திரை மாதத்தின் வளர்பிறை திருதி நாளில்.இதை புராணங்கள் நமக்கு சொல்கிறது. பிரம்மாவே தனது தொழிலைத் துவக்கிய நாள் அட்சய திருதியை என்பதால் அந்த நன்னாளில் அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்துகொண்டே இருக்கும். நகை, ஆபரணங்கள் வாங்குவதும் , வீட்டுக்கு தேவையான பொருட்கள் , நிலம், வீடு போன்றவைகள் வாங்குவதற்கும் அட்சய திருதியை உகந்த நாள். அந்த நாளில் ஏழை, எளியோருக்கு தானம் செய்தால் அதற்கான புண்ணியம் பலமடங்கு பெருகி நம்மையும் நமது சந்ததியினரையும் வளமாக வாழ வைக்கும்.

அட்சய திருதியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கிறது

பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, பசியால் அவதிப்பட்டனர். அதிலிருந்து விடுபட மகாவிஷ்ணுவை வேண்டினார்கள் . மகாவிஷ்ணுவோ, இதற்கு தீர்வாக சூரியபகவானை வழிபட வேண்டும் என்று வழிகாட்டினார்.

பாண்டவர்கள் சூரிய வழிபாடு செய்தவுடன் சூரிய பகவான் அட்சய பாத்திரம் வழங்கினார். சித்திரை மாதத்தில் பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம் கேட்டதையெல்லாம் வழங்கியது என்கிறது மகாபாரதம்.

கண்ணனின் நண்பரான குசேலரின் வாழ்க்கையில் வறுமை சூழ்ந்திருந்தது. தன் வறுமையை போக்க, கண்களில் ஆவலோடும்,ஒரு பிடி அவலோடும் கண்ணனை காணச்சென்றார் குசேலர்.அவலை எப்படி கொடுப்பது என்று குசேலர் யோசித்த போது, கண்ணன், ” அட்சய” என்று சொல்லி அந்த அவலை எடுத்து உண்டார்.வீடு திரும்பிய குசேலர் தன் வீட்டையும், மனைவியையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு செல்வம் குவிந்திருந்தது என்கிறது மற்றொரு புராண கதை.

தனது பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட,அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்த நாளில் தான்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அட்சய திருதியை பூஜை எப்படி செய்வது?

அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். நாம் அன்றாடம் வணங்கும் தெய்வ படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மலர் சாற்ற வேண்டும். குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து, கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட்டு, அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் அதனை கலசமாக தயார் செய்து, கலசத்திற்கு முன்பாக நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும்.

எது உண்மையான அட்சய திருதியை?

மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ வைக்க வேண்டும்.அதனுடன் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களையும் கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தொட்டதெல்லாம் துலங்கும் இந்த நன்னாளில் வெறும் பொருள் சேர்க்கையை மட்டும் மனதில் கொள்ளாமல், எளியவர்களுக்கு நம்மால் இயன்ற தான தர்மங்களை செய்வது தான் உண்மையான அட்சய திருதியை ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.