Type Here to Get Search Results !

இருதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், வயிற்று அழற்சி… வால்நட் பற்றித்தெரிந்து கொள்வோம்…?

 

நான்கு மூளைகளை ஒன்றுசேர்த்தது போல தோற்றமளிக்கும் வால்நட் கொட்டைகள் உண்மையில் நமது முன்னோர்களை புத்திசாலியாக்கியுள்ளன என்றால் நம்ப முடிகிறதா? அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளும்முன், வால்நட் பற்றித்தெரிந்து கொள்வோம்.

அக்ரூட் பருப்பு என்றும், வாதுமைக் கொட்டைகள் என்றும் நம்மிடையே வழங்கப்படும் இந்த வால்நட்டின் தாவரப்பெயர் Juglans regia. இதற்கு இலத்தீன் மொழியில் கொட்டை இனத்தின் ராஜா என்பது பொருளாம்.

ஆதிமனிதனின் உணவுகளில் முதன்மையான ஒன்றாக விளங்கும் இந்த ராஜ வாதுமையின் பிறப்பிடம் பெர்சியா. மூளையின் வடிவத்தைக் கொண்டதால் இது ‘Chahar Maqs’, அதாவது நான்கு மூளைகள் என்று பெர்சியன் மொழியில் சொல்லப்படுகிறது. வானுலகிலிருந்து பூமிக்கு கடவுள் வந்தபோது, வால்நட் மரங்களில்தான் வசித்ததாகவும் நம்புகிறார்கள்.

பொதுவாக இந்த வால்நட் மரங்கள் ஆறு முதல் ஏழு அடி பருமன் வரையிலும், 120 அடி உயரம் வரையிலும் வளர்பவை. இவை 250 வருடங்கள் வரை வாழக்கூடியவை என்று கூறும் இயற்கை ஆர்வலர்கள், இவற்றின் பழம், இலை, மரப்பட்டை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை என்றாலும், கொட்டைகள் தான் ஆரோக்கியத்தின் சுரங்கம் என்கின்றனர்.

அப்படியென்ன குணங்கள் இந்த வால்நட் கொட்டைகளில் அடங்கியுள்ளன என்று பார்த்தோமேயானால், 65% கொழுப்புத்தன்மை, அதிகளவு கலோரிகள் (650/100g), அதிகளவு புரதச்சத்து, அதிகளவு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் என உண்மையில் நம்மை அதிகமாகவே அச்சுறுத்துகின்றன வால்நட்கள்.

ஆனால், இவற்றின் கலோரிகளும், கொழுப்புகளும் இவ்வளவு அதிகம் இருந்தாலும், இவற்றை உண்ணும்போது எடை கூடுவதில்லை. உடலில் கொழுப்பும் உறைவதில்லை. அத்துடன் பழைய கொழுப்பையும் கரைத்து இரத்த அழுத்தம், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளை நன்கு குறைக்கிறது என்று இந்த ஆரோக்கியக் கொட்டைகளைக் கொண்டாடும் மருத்துவர்கள் இது எப்படி சாத்தியம் என்பதையும் விளக்குகின்றனர்.

ஆம்… வால்நட்டின் நார்ச்சத்து, A, E, K, B வைட்டமின்கள் மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க், செலீனியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், போரான் போன்ற கனிமங்களும், முக்கியமாக PUFA-வின் (Poly Unsaturated Fatty Acids) ஓமேகா 3 மற்றும் ஓமேகா 6 கொழுப்பு அமிலங்களும் ஒன்றுசேர்ந்து, கொழுப்பு கரையும் மேஜிக்கை மேற்கொள்கின்றன.

“Handful of Walnuts keeps the Heart Diseases away…” என்பார்கள். அதாவது தினமும் ஏழு முதல் எட்டு வால்நட்களை உட்கொள்வதால் உடற்பருமன், இருதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், வயிற்று அழற்சி ஆகிய வாழ்க்கைமுறை நோய்கள் குறைந்து வாழ்நாள் நீடிக்கிறது என்று வால்நட்களைப் பரிந்துரைக்கிறது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.

அப்படியென்றால் கிட்டத்தட்ட மனிதனின் மூளை வடிவையொத்த வால்நட்களுக்கும், அறிவுக்கூர்மைக்கும் தொடர்பு இல்லையா என்றால், இதன் சிறப்பு புரதங்கள், ஃபோலிக் அமிலம், ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் மூளையின் நரம்புகளை ஊக்கப்படுத்தி, ஞாபகத்திறனை அதிகரிக்கின்றன. இதன் அதிகக் கலோரிகள் தேவையான ஆற்றலை மூளைக்கு அளிக்கின்றன என்பதாலேயே குழந்தைகளுக்கு இவை முக்கியமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மேலும் வயோதிகத்தின் தூக்கமின்மை, ஞாபகமறதி, குழப்பநிலை, மன அழுத்தம், அல்சைமர் நோய் போன்ற மூளை சார்ந்த பாதிப்புகளையும் தவிர்க்கின்றன இந்த மூளை வடிவ வாதுமைகள்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், வால்நட்டின் டோகோபிரால், டானின்கள் மற்றும் மெலடோனின் செல்களின் வீக்கத்தையும், மரபணுக்களின் மாற்றத்தையும் குறைத்து, புற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படி எல்லா வகையிலும் ஆரோக்கியத்தை அளிக்கும் வால்நட்களால் ஒருசிலருக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சரி… இப்போது கட்டுரையின் முதலில் கேட்கப்பட்ட கேள்வியை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

இந்த வால்நட் கொட்டைகள் எப்படி நமது முன்னோர்களை புத்திசாலியாக்கியுள்ளன என்றால், இவை தரும் மேற்கூறப்பட்ட ஆரோக்கியம் ஒரு காரணம் என்றாலும், இன்னொரு அழகிய காரணமும் இங்குள்ளது.

மரத்தில் காய்த்த கனிகளுக்குள் ஒளிந்திருந்த கொட்டைகளைத் தேடலுடன் கண்டறிந்த ஆதிமனிதன், அதன் ஓடுகளிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தை உருவாக்கி, அதன்பின் அந்தக் கொட்டைகள் அளிக்கும் ஊட்டத்தையும், அவற்றின் நன்மை தீமைகளையும் பாகுபடுத்தி, பல்வேறு புதுமைகளைப் புகுத்தியால் புத்திசாலி மனிதனாக உருவெடுத்தான்.

அதாவது மனிதனின் தேடல், புதியதொரு தொழில்நுட்பத்தைக் கற்பிக்க, தொழில்நுட்பம் அவனது ஆரோக்கியத்தை அதிகரிக்க, ஆரோக்கியம் அவனது மதிநுட்பத்தை அதிகரித்தது என்ற புரிதலை வால்நட் மரம் மட்டுமன்றி இயற்கை வளம் நிறைந்த இந்த பூமி நமக்குத் தருகிறது!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.