தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவராக ‘லியோனி பதவியேற்பு விழா’ நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
தமிழக பள்ளி கல்வி துறையின் துணை நிறுவனமாக செயல்படும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், அரசின் பாட புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்தின் நிர்வாக பணிகளை, மேலாண் இயக்குனர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிகண்டனும், உறுப்பினர் செயலர் பொறுப்பில் உள்ள இயக்குனர் நாகராஜ முருகனும் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பாடநுால் கழக தலைவராக, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் லியோனியை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
பதவியேற்கும் முன், அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசியவருக்கு, பள்ளி கல்வி பதவியா’ என, எதிர்ப்புகள் எழுந்தன.
நேற்று அமாவாசை நாள் என்பதால், காலை பதவியேற்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு, பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், நேற்று மாலை வரை பதவியேற்க லியோனி வரவில்லை. வராததற்கான காரணமும், பாடநுால் கழகத்துக்கு, லியோனி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இதனால், அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
லியோனி நியமனத்தை ரத்து செய்க: ஓபிஎஸ்
‘பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டிருப்பது, அந்த கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்து உள்ளது.இதனால், அந்த கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாக பேசுவது; அரசியல் கட்சி தலைவர்களை நா கூசும் வகையில் வசைபாடுவது; நாகரிகமற்ற, தவறான, ஒழுக்கமற்ற கருத்துகளை, மக்கள் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை, வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி.
இவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் வழியே, தவறான கருத்துகள், மாணவ – மாணவியரிடம் எடுத்து செல்லப்படுவதோடு, அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப் படும்.எனவே, தமிழக மாணவ – மாணவியர் நலன் கருதி, நல்ல கருத்துகள் மாணவ – மாணவியரை சென்றடைய, இந்த நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Click Here :- Tamil News | Today Tamil News | Online Tamil News | Latest News | Tamil News Live | India News | Breaking News | World News | latest Tamil news | Politics News | Cinema news | City News | District News | Sports live news | Technology news updates | Google News