Type Here to Get Search Results !

ஐயப்பன் கோவிலில் திங்கட்கிழமை வரை நெய் அபிஷேகம் செய்யலாம்…. 20ஆம் தேதி திருநடை சாத்தப்படும்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜையும், தை மாதம் நடைபெறும் மகரவிளக்கு பூஜையும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த பூஜை காலங்களில் நடை திறந்திருக்கும் நாட்களில் தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு கொரோனா காரணமாக முதலில் தினமும் 1000 பக்தர்களுக்கும், பின்னர் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டத்துடன் காணப்படும் சபரிமலை இந்த ஆண்டு குறைவான அளவில் பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர். கோவில் வருமானமும் குறைந்து விட்டது. டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்பட்டது.
டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. தினசரியும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பேட்டைத்துள்ளல், திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஜனவரி 14ஆம் தேதியன்று மகரஜோதி தரிசனம் நடந்தது. அன்றைய தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் அவர்கள் மட்டுமே மகரஜோதியை தரிசிக்க முடிந்தது. மகரஜோதி தெரிவதற்கு முன்னதாக பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
மகரஜோதி தரிசனம் முடிந்ததும் திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிப்பார்கள். இன்றும், நாளையும் உச்ச பூஜை மற்றும் மாலை நேர பூஜையின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை காட்டப்படும்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு புஷ்பாஞ்சலி நடத்தப்படவில்லை. ஞாயிறன்று புஷ்பாஞ்சலி நடத்தப்படும் நேரத்தில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். ஜனவரி 17ஆம் தேதி ஞாயிறு வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம்.
திங்கட்கிழமை வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19ஆம் தேதி தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.