Type Here to Get Search Results !

பிடன் பதவியேற்பதற்கு முன்னர்… அமெரிக்காவை விட்டு வெளியேற தயாராகும் ட்ரம்ப் : எங்கே செல்கிறார் தெரியுமா…!

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் காவல்துறை அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து அதிகாரத்தை கையில் எடுத்த துணை அதிபர் மைக் பென்ஸ் தேசிய பாதுகாப்பு படையினரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினார்.
அதிபர் ட்ரம்பின் உத்தரவின்றி துணை அதிபர் மைக் பென்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பென்ஸ் உறுதிபடுத்தினார்.
இந்தநிலையில் வரும் புதன்கிழமை 20ஆம் தேதியன்று 46வது அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார். இதனை முன்னிட்டு வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்க உள்ளார்.
பிடன் பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி வாஷிங்டன் நகரத்தில் இருந்து விமானம் மூலம் புளோரிடா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடாவில் உள்ள தனது பிரம்மாண்டமான பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேற உள்ளார். புளோரிடா கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட பண்ணை வீட்டில் தங்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த சிலரையும் தன்னுடன் பணிக்கு அழைத்து செல்ல உள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக வேறு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக்கூடாது என்று அமெரிக்க மக்கள் கவலையுடன் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.