Type Here to Get Search Results !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு…. ஒருநபர் விசாரணை ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை நிறைவு…

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயனைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் உள்ளிட்ட 585 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும் 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் ஆணையத்தின் 24-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற விசாரணை இன்று முடிவடைந்தது. இதில் மொத்தம் 31 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி, காணொலி மூலம் விசாரணை நடத்த வேண்டுகோள் விடுத்து மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஒருநபர் ஆணையம் சார்பில் 24 கட்டங்களிலும் சேர்த்து இதுவரை 980 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 616 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.
மேலும், இதுவரை 850 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஆணையத்தின் 25-ம் கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 2 -வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு…. ஒருநபர் விசாரணை ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை நிறைவு… appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.