Type Here to Get Search Results !

டிடிவி தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு குருமூர்த்தி பில்டப் பேச்சு… அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வள்ளுவர்  திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், வி.ஜி.பி.சந்தோஷம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜாதி, மதம், இன, மொழி அனைத்தையும் கடந்தது திருக்குறள். யாகாவாராயினும் நா காக்க என்பது அரசில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றார். 
அப்போது குருமூர்த்தி துக்ளக் விழாவில் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஆடிட்டர் குருமூர்த்தி மனதில் சாணக்கியன், கிங் மேக்கர் என்று நினைத்து கொண்டிருப்பதாகவும், பிதாமகன், சாணக்கியன் போல் அவர் பேசி வருகிறார் என்றும், 2021ல் அதிமுகவை கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டதாகவும், இல்லாத விஷயத்தில் வேண்டுமென்றே மாயையை ஏற்படுத்துவது அறிவற்றதன்மை என்றும் குற்றம்சாட்டினார். யாருக்காக குருமூர்த்தி வக்காலத்து வாங்குகிறார் என கேள்வி எழுப்பிய அமைச்சர், டிடிவி தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு குருமூர்த்தி பேசி வருவதாகவும், குருமூர்த்தி எப்போது நாரதர் வேலை பார்க்க ஆரம்பித்தார் என்றும், தமிழக அரசியலில் குருமூர்த்தி கிங் மேக்கர் என்று பில்டப் செய்து வருவதாகவும் தாக்கினார். 
தொடர்ந்து பேசிய அவர், ஜே.பி.நட்டா கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்றும், ஒருமித்த கருத்தோடு அனைவரும் இருக்கும்போது வெண்ணை திரண்டு வரும் போது பானை உடைப்பது போல யாரும் செய்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தி கருத்திற்கு பதிலளித்த அவர், ஜல்லிக்கட்டை ஒழித்ததே காங்கிரஸ் திமுக தான் என்றும், தேர்தல் சமயம் என்பதால் தான் ராகுல் காந்தி மதுரை வந்துள்ளதாகவும், ஓட்டு பிச்சை கேட்டும், செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடி ராகுல் வந்திருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.