சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இடஒதுக்கீடு தொடர்பாகவும் அமைச்சர்கள் குழுவும் பாமக குழுவும் ஏற்கனவே 4 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துவிட்டன. ஆனால், முடிவு எதுவும் எட்டப்படாததால், தற்போது பாமக சைலண்ட் மோடில் உள்ளது. அதேவேளையில் அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமக 35 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது. ஆனால், அதிமுக தரப்பில் 20-25 தொகுதிகள் வரை வழங்க முடியும் என்று கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்னொருபுறம் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 25 தொகுதிகள் வழங்கப்படக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், பாமக தரப்பில் 35 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2011-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. எனவே, அதற்கு அதிகமான தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் அதிமுகவிடம் உறுதியாக பாமக கூறிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக அதிக வாக்கு சதவீதத்தை பாமக பெற்றதால், அதற்குண்டான மரியாதை கூட்டணியில் கிடைக்க வேண்டும் பாமக எதிர்பார்க்கிறது. பாஜகவைவிட கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பாமக விரும்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்குதான் அதிகபட்சமாக 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதேபோன்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பாமக தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.