தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதேபோல சில தொகுதிகளை குறி வைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கரூர் சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். கோயிலில் சாமி கும்பிட்டு பிரசாரத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி, தனது டிரேட் மார்க் பிரசாரமான பெண்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் பணியையும் இனிதே தொடங்கினார்.
தேர்தல் பிரசாரத்தில் செந்தில் பாலாஜி பேசுகையில், “மண் வெட்டி எடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகவில்லை. கூவத்தூரில் ஒரு சிலருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துதான் அவர் முதல்வரானார். அன்று நானும் அந்தப் பாவத்தை செய்தேன். அந்தத் தவறுக்கு நானும் காரணமாகிவிட்டேன். அந்த பாவத்தை கழுவவே நல்ல இடத்தில் சேர்ந்திருக்கிறேன். முதல்வராக எடப்பாடி பழனிசாமியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பழனிசாமியின் பதவியின் நாட்களும் எண்ணப்படுகின்றன. எடப்பாடியில் மட்டுமல்ல, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.” என்று செந்தில் பாலாஜி பேசினார்.