சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் தனது பங்களிப்பு இருக்கும் என்று மு.க.அழகிரி கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதனை தொடர்ந்து அழகிரியை சமாதானம் செய்யும் பணியில் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் சகோதரி செல்வி முழு வீச்சில் இறங்கினர். அழகிரி மற்றும் ஸ்டாலினை சந்தித்து இருவரையும் ஒன்று சேர்க்கும் பணியில் அவர்கள் இருவருமே தீவிரம் காட்டினர். அவர்களிடம் தனக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணமோ, திமுக தலைவராகும் எண்ணமே இல்லை என்பதை மு.க.அழகிரி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இதன் பின்னரே சமாதானப்பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. பதவி தேவையில்லை என்றால் பிறகு அழகிரி எதிர்பார்ப்பது என்ன என்று ஸ்டாலின் கேட்க, சமாதானப்பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியது. தனது மகனுக்கு திமுகவில் நல்ல பதவி, தனக்கு திமுக அறக்கட்டளையில் இடம் என்று இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் மு.க.அழகிரி. இது குறித்து செல்வி மற்றும் தமிழரசு மு.க.ஸ்டாலினை சந்தித்து தீவிரமாக பேசியுள்ளனர். இதன் முடிவாக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு கொடுக்க ஸ்டாலின் சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது.
மேலும் ஜனவரி 30ந் தேதி அழகிரி பிறந்த நாளன்று அவரை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்திக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் அழகிரி தரப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை கொண்ட திமுக அறக்கட்டளையில் தன்னை உறுப்பினராக்க வேண்டும் என்கிற தனது மற்றொரு கோரிக்கையில் உறுதியாக இருந்தார். தற்போது திமுக அறக்கட்டளையில் உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர். இது குறித்து ஸ்டாலின் தனது மருமகன் மற்றும் மகனிடம் நடத்திய ஆலோசனை முடிவில் அறக்கட்டளையில் அழகிரிக்கு இடம் அளிக்க மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.
இதனால் தான் கடந்த 30ந் தேதி அழகிரியை சந்திக்க இருந்த நிகழ்வை கடைசி நேரத்தில் ஸ்டாலின் ரத்து செய்துவிட்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பதறிப்போன செல்வி மற்றும் தமிழரசு மறுபடியும் அழகிரியை சந்தித்துள்ளனர். அப்போது தான் ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டேன், தன்னுடைய மகனுக்கு கட்சியில் பதவியை எதிர்பார்ப்பது ஒரு சாதாரண விஷயம், இதே போல் தனது தந்தை கலைஞரால் திமுக அறக்கட்டளை மேம்படுத்தப்பட்டது. அப்படி இருக்கையில் அந்த அறக்கட்டளையில் அவரது மூத்த மகனான எனக்கு இடம் கிடையாதா? என்று அழகிரி கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அழகிரி தீவிரமாக உள்ளதால் அறக்கட்டளை விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்குமாறு ஸ்டாலினிடம் தமிழரசுவும், செல்வியும் கூறியுள்ளதாக சொல்கிறார்கள். இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் மு.க.அழகிரியையும் திமுக எதிர்க்க வேண்டிய நிலை வரும். எடப்பாடிக்கு மட்டும் அல்லாமல் மு.க.அழகிரியின் பிரச்சாரத்திற்கும் பதில்அளிக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏற்படும் என்றும். இந்த தர்மசங்கடமான சூழலை தவிர்க்க அழகிரியின் கோரிக்கையை ஏற்பது தான் சரியாக இருக்கும் என்று ஸ்டாலினுக்கு தூது சென்றவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனராம்.