சசிகலா சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்ட போது தினகரன் பெங்களூருவில் இருந்தார். ஆனால் அன்றைய தினமே அவர் சென்னை திரும்பினார். இதே போல் சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போதும் தினகரன் பெங்களூரில் இருந்தார். ஆனால் அவரை சசிகலா தங்கியுள்ள ஹோட்டலில் பார்க்க முடியவில்லை. இதன் மூலம் டிடிவியிடம் இருந்து சசிகலா ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வதை பார்க்க முடிகிறது. அதே சமயம் சசிகலா தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை டிடிவி தினகரன் தான் செய்து வருகிறார். இதற்காகவே சுமார் 2 நாட்கள் டிடிவி மதுரையில் தங்கியிருந்ததாக சொல்கிறார்கள்.
குறிப்பாக முக்குலத்தோர் சமுதாய அமைப்பு நிர்வாகிகளை வரவழைத்து டிடிவி பேசியதாக கூறுகிறார்கள். சுமார் 195 முக்குலத்தோர் சமுதாய அமைப்பு சசிகலாவை வரவேற்க பேனர்களுடன் வருவதாக டிடிவியிடம் வாக்குறுதி அளித்தனர். இதனை அடுத்தே சசிகலா வரும் ஞாயிறன்று தமிழகம் திரும்புவதாக உற்சாகமாக அறிவித்தார் டிடிவி தினகரன். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும் போதும் டிடிவி இதனையே தெரிவித்தார். ஆனால் சென்னை திரும்பிய பிறகு திடீரென சசிகலா வருகையில் மாற்றம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தினகரன்.
சசிகலா வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் திங்களன்று தமிழகம் வருவார் என்று தினகரன் கூறியுள்ளார். இப்படி திடீரென ஒரே நாளில் சசிகலா பயணத்திட்டம் மாறியது ஏன் என்கிற கேள்வி எழுந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், அன்றைய தினம் கூட்டத்தை எளிதாக கூட்டலாம் என்பது தினகரன் கணக்கு. ஆனால் சசிகலா நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து திங்கட்கிழமையை தேர்வு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இது தொடர்பாக சசிகலா – தினகரன் இடையிலான தகவல் தொடர்பில் ஏற்பட்ட சிக்கலே சசிகலா வருகை தொடர்பான நாளில் குழப்பம் ஏற்பட காரணம் என்கிறார்கள்.
சிறையில் இருக்கும் போது முதலே சசிகலா –டிடிவியிடம் சரியாக பேசுவதில்லை என்கிற ஒரு தகவல் இருந்தது. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பெரிய அளவில் டிடிவியை சசிகலா கண்டுகொள்ளவில்லை. டிடிவியிடம் நேரடியாக பேசுவதையும் சசிகலா தவிர்த்து வருவதாகவே சொல்கிறார்கள். மேலும் தமிழகத்தில் சசிகலாவை வரவேற்கும் ஏற்பாடுகளை மட்டுமே டிடிவி கவனிப்பதாகவும், சசிகலா தங்கும் இடம் அவரது அரசியல் ரீதியலான சந்திப்புகளை இளவரசியின் குடும்பத்தினர் கவனிப்பதாகவும் கூறுகிறார்கள். அந்த வகையில் சசிகலா தமிழகம் வருகை தொடர்பாக டிடிவியிடம் சரியான தகவல்களை கூறவில்லை என்பது தான் இப்படி மாற்றி மாற்றி அறிவிப்பு வெளியிட காரணமாகியுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்து தற்போது கொரோனா குவாரண்டைனும் முடிந்த நிலையில் சசிகலா தனது நெருங்கிய உறவினர்களை மட்டுமே சந்தித்து வருகிறார். தற்போது வரை கட்சிக்காரர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. இதற்கு காரணம் அதிமுகவில் இருந்து தற்போது வரை பெரிய அளவில் யாரும் சசிகலா தரப்பை தொடர்பு கொள்ளாதது தான் என்கிறார்கள். அதே சமயம் சசிகலா சில அமைச்சர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து எதிர்பார்த்த ரியாக்சன் இல்லாதது சசிகலாவை அப்செட்டாக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அதிமுகவை தற்போதைய சூழலில் சட்டப்போராட்டம் நடத்தி மட்டுமே தனது வழிக்கு கொண்டு வர முடியும் என்று சசிகலா உணர்ந்து கொண்டதாக கூறுகிறார்கள். எனவே தற்போதைய நிலையில் ஆட்சிக்கோ, கட்சிக்கோ பிரச்சனை ஏற்படுவதை சசிகலா விரும்பமாட்டார் என்றே சொல்லப்படுகிறது.