Type Here to Get Search Results !

சென்னையில் அனுமதியின்றி பேரணி சென்றால் சட்டப்படி நடவடிக்கை.... அதிரடியில் எடப்பாடியார்...!

 


சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ள நிலையில் அவரை வரவேற்க  12 இடங்களில் வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி அமமுக நிர்வாகி செந்தமிழன் அளித்த மனுவை சென்னை போலீசார் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானார். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அவர் தற்போது பெங்களூரு புறநகர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கிறார். வரும் 8ம் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு அவர் சென்னை வர உள்ளார். அப்போது, அவரை வரவேற்க பெங்களூரு முதல் சென்னை வரும் வரை பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்ய அமமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 

சென்னையிலும் இதேபோல் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். சசிகலா செல்லக் கூடும் என கருதப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை பராமரிப்பு காரணங்களுக்காக அரசு மூடியுள்ளது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்வார் எனவும் கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உள்ளே சசிகலா செல்லாவிட்டாலும் வெளியே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி சென்னை போலீசில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமமுக நிர்வாகி செந்தமிழன் மனுவை சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னையில் அனுமதியின்றி பேரணி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.