விவசாய சட்டங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து அமெரிக்கா கருத்து கூறியுள்ளது. 'அமைதி போராட்டம் ஜனநாயகத்தின் தனிச் சிறப்பு. பிரச்னைகளுக்கு பேச்சு மூலமே தீர்வு காண வேண்டும். இந்தியாவின் புதிய விவசாய சட்டங்கள் புதிய சந்தை வாய்ப்பைகளை உருவாக்குவதாக உள்ளது' என அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் கருத்தை முழுமையாக கவனிக்க வேண்டும். எந்தப் போராட்டத்தையும் இந்திய ஜனநாயகத்தின் நடைமுறைகள் மற்றும் அரசியலுக்கு உட்பட்டே பார்க்க வேண்டும். தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக உரியவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.
அமெரிக்க பார்லியில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்த வன்முறை எந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதே தாக்கம் விவசாயிகள் போராட்டத்தின்போது செங்கோட்டையில் நடந்த வன்முறையும் ஏற்படுத்தியுள்ளது; அது உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு கையாளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.