மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுதும் நாளை விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். இதையொட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என். ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே 'டில்லி தவிர்த்து நாடு முழுதும் நாளை சாலை மறியல் போராட்டம் நடத்தப் படும்' என பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். மறியல் போராட்டத்தின் போது பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உணவும் குடிநீரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே டில்லி எல்லையோர சாலைகளில் போடப்பட்ட முள் தடுப்புகளை போலீசார் அகற்றி வேறு இடங்களில் வைக்கத் துவங்கியுள்ளனர்.மேலும் டில்லியில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படையினரின் பஸ்களில் கல்வீச்சை தடுக்கும் வலைகளை பொறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் விரைந்து பணிகளை மேற்கொள்ளும்படி துணை ராணுவப் படையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் டில்லியில் துணை ராணுவ படையினர் மேலும் இரு வாரங்கள் தங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.