Type Here to Get Search Results !

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி இன்று விடுதலை

 


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி இன்று விடுதலையாகிறார். நான்கு ஆண்டு காலம் தண்டனை நிறைவடைந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். சுதாகரனின் தண்டனை காலம் முடிந்து விட்டநிலையில், இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளதால் அவர் விடுதலை செய்யப்படுவது தள்ளிப்போகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா, அவரது அண்ணி இளவரசி, சுதாகர் உள்ளிட்ட மூவரும் சிறைக்கு சென்றனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு 4 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையானார். இருப்பினும் அவர் விடுதலைக்கு முன்பாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கேயே சிறைத்துறை அதிகாரிகள் ஆவணங்களில் கையெழுத்து வாங்கியபின் அவரை விடுதலை செய்தனர்.

சசிகலா உடன் சிறையில் தங்கியிருந்த இளவரசிக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்ட நிலையில் அவரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் கொரோனவிலிருந்து மீண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இளவரசியின் தண்டனை காலம் இன்றுடன் நிறைவடைவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அவர் இன்று காலை 11 மணியளவில் விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் சகோதரர் ஜெயராமன் மனைவிதான் இளவரசி. ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டார். அங்கே நடந்த மின்சார விபத்தில் அவர் இறந்துபோக, அவருடைய மனைவி இளவரசி சசிகலாவுடன் போயஸ் கார்டனில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

இதனையடுத்து இளவரசிக்கும், ஜெயலலிதாவின் வீடுதான் நிரந்தர முகவரி ஆகிப்போனது. இருப்பிடச் சான்றிதழ் முதல் வாக்காளர் அடையாள அட்டைவரை இளவரசிக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் முகவரிதான் தரப்பட்டிருக்கிறது. இளவரசிக்கு மகன்,மகள் உள்ளனர். அவர் சென்னை திரும்பிய பின்னர் மகன் வீட்டிற்கு சென்று தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா பெங்களூரு பண்ணை வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார் வரும் 8ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரில் இருவர் விடுதலையாகி விட்டனர். சசிகலா, இளவரசி உடன் சிறை சென்ற சுதாகரனின் தண்டனை காலம் முடிந்து விட்டநிலையில், இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளதால் அவர் விடுதலையாவது தள்ளிப்போகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.