காலாவதியான சட்டங்களை ரத்து செய்து வணிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களை கேட்டுக் கொண்டார். அதேபோல் வலுவான பொருளாதார வளர்ச்சி அடைய மத்திய அரசும் மாநில அரசும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6ஆவது நிதி ஆயோக் கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கியது. விவசாயம் கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, உற்பத்தி உள்ளிட்டவை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக அமையப்போகிறது என்றார். இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன, அவர்களுடன் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றார். குறிப்பாக காலாவதியான சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் வணிகத்தை எளிதாக்க முடியும் என்றார். நாட்டின் வளர்சிக்கு வணிகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என மாநில முதல்வர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதேபோல் வலுவான பொருளாதார வளர்ச்சியை அடைய மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார், அரசாங்கத்தின் தன்னம்பிக்கை மற்றும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க தனியார் துறையினருக்கும் முழு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார், பொருளாதார முன்னேற்றத்திற்கு, அரசாங்கம் தனியார் துறைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், அவைகளுக்கு சரியான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு நம் பட்ஜெட் வழிவகுத்துள்ளது. அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றார்.
அது நாடு வளர்ச்சியின் பாதையில் இன்னும் விரைவாக செல்ல விரும்புகிறது என்பதற்கான அறிகுறி என்றார். தனது அரசின் முயற்சியால் நாட்டின் கட்டுமானத்திற்கு பங்களிப்பு செய்ய அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார். வேளாண்துறையை குறிப்பிட்டு பேசிய அவர், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். இதன் மூலம் சமையல் எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்வது வெகுவாகக் குறைக்க முடியும் என்றார். விவசாயிகளை முறையாக வழி நடத்துவதால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார். உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் செலவிடப்படும் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு திருப்ப முடியும் என்றார். மக்கள் மீதான அவசியமற்ற சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை தளர்த்தி கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டியதின் அவசியத்தையும் மோடி விவரித்தார்.
இந்தச் சூழலில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் சிறப்பு குழுக்களை அமைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வரிசைப்படுத்த முன்வருமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். இளைஞர்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள், நாட்டின் எண்ண ஓட்டத்தை தீர்மானிப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கொரோனாவை தடுப்பதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயற்பட்டதால்தான் உலக அரங்கில் இந்தியாவிற்கு நற்பெயர் கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றத்தை காண முடிகிறது என்றார்.