தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக கட்சிகள் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தற்போது பாமக சார்பில் அதிரடி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பிப்ரவரி 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
வரும் 23-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 26-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கண்ட அலுவலகத்தில் பெற்று, நிரப்பி, உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000, தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000, அனைத்து தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5,000 வீதம் செலுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.