புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் காலையில் கூடிய சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில்;- புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை எனது அரசு நிறைவேற்றியது. விவசாயிகளின் கூட்டுறவு கடனை ரத்து செய்துள்ளோம். மாநில பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை 95 சதவீதம் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். புதுச்சேரி அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7 சதவீதம் தான். ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதமாக உள்ளது.
கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற பணிகள் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா காலகட்டத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். காங்கிரஸ் அரசு கொரோனா பாலத்தில் சிறப்பாக செயல்பட்டு தொற்றை கட்டுப்படுத்தியது. மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கொரோனா காலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்களுக்கு சேவையாற்றினர். மாநிலத்தில் தற்போது நடப்பது எதிர்க்கட்சிகளின் ஆட்சி கவிழ்ப்பு வேலை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அனைவரும் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை வேண்டும்.
எவ்வளவு இன்னல்கள் கடந்தும் புதுச்சேரி மக்கள் நலனுக்காக எனது அரசு இரவு பகலாக பாடுபட்டுள்ளோம். அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது, துரோகம் இல்லையா? மத்திய அரசு மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஆதரித்தால் அது எதிர்க்கட்சிகளை பாதிக்கும். கலைஞர் பெயரில் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கினேன். அதை மத்திய அரசு காப்பி அடித்தது.
புயல், வெள்ள பாதிப்பின்போது எதிர்க்கட்சியினர் யாரையும் காணவில்லை. நாடாளுமன்றத்தில் பெருபான்மை இருந்தால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாமா? பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தியதே மத்திய அரசின் சாதனை என முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை கொண்டு ரெய்டு நடத்தியதால் சிலர் ஓடிப்போனார்கள். 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார் மோடி, 6 ஆண்டுகளாகியும் வேலை தந்தாரா? கறுப்பு பணத்தை மீட்டுவிட்டார்களா? ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்திவிட்டார்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மத்திய அரசு மீது முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியபோது எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இறுதியில் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.