புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து நாராயணசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் நேற்று கூறுகையில்;- புதுச்சேரி அரசால் தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு எந்த வித அழுத்தமும் கிடையாது. தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குகேட்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறிவிட்டேன் என்றார். தற்போது நான் திமுகவில் தான் உள்ளேன். எம்எல்ஏ பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- புதுச்சேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.