மக்கள் அச்சப்பட தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என தமிழக பாஜக மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பாஜக மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தி பாஜக தேர்தல் களத்தை சந்திக்கும். புதுச்சேரி மாநிலத்தில் நியமன எம்.எல்.ஏ-க்கள் ஓட்டுப்போட தகுதி உள்ளது. அதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. தர்மேந்திர பிரதான் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
வருமான இழப்பு வரும் என்பதால் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை கொண்டு விலை நிர்ணயம் செய்து வருகிறோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை விரைவில் கட்டுப்படுத்தப்படும்.
மேலும், பேசிய அவர், சேலத்தில் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. விழுப்புரத்தில் அமித்ஷா பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. பெண்கள் பாஜகவின் பக்கம் சாய்ந்து உள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.