இடுக்கி மாவட்டம், தொடு புழாவில் பழங்குடியினர் நலனுக் கான தன்னார்வ தொண்டு நிறுவன மான ‘எச்ஆர்டிஎஸ் இந்தியா’ சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு பி.சி.ஜார்ஜ் சிறப்பு பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்தார்.
பழங்குடியினர் நலன் தொடர் பான அந்தக் கூட்டத்தில் பேசிய ஜார்ஜ், “லவ் ஜிகாத் என்பது மிக, மிக உண்மை. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம்கள் திட்டமிட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அவர்கள் திட்டம் தள்ளிப் போயுள்ளது. அதனால் இந்தியாவை உடனே இந்து தேசமாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம்கள் 2030-க்குள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள்.
இதேபோல் கிறிஸ்தவ நாடான பிரான்ஸையும் இஸ்லாமிய நாடாக்க முயற்சிக்கிறார்கள். எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் தேசத்தை அர்ப்பணிக்கலாமா? அதைப் பற்றி யாராவது பேச வேண்டாமா? அதனால்தான் நான் பேசுகிறேன்.
இஸ்லாமியர்கள் நாடான அரேபியாவில் இஸ்லாமைத் தவிர மற்ற மதங்களை பொருத்தமற்றதாக நினைக்கிறார்கள். உச்ச நீதிமன்றமேலவ் ஜிகாத் இல்லை என்கிறது.ஆனால் நான் லவ் ஜிகாத் இருக்கிறது என்பேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்கவேண்டும்” என்றார்.
எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் அதிரடி பேச்சால் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த 2018-ம் ஆண்டு ஜலந்தர் பிஷப் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கியது. அந்த விவகாரத்தில் பாலியல் புகார் சொன்ன கன்னியாஸ்திரியை ‘விலைமாது’ என பி.சி.ஜார்ஜ் விமர்சித்தார். கூடவே மொத்தம் 13 முறை பாலியல் வன்மம் நடந்த போதும், 12 முறை சம்மதித்த கன்னியாஸ்திரி 13-வது முறை மட்டும் புகார் கொடுத்தது ஏன் என்று ஜார்ஜ் அதிரடியாக பேசினார்.
கடந்த 2017-ல் கேரள மகளிர் ஆணைய தலைவர் ஜோசபின், பி.சி.ஜார்ஜ்க்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கிளப்பினார். அதில் பி.சி.சார்ஜ் தனக்கு தொடர்ந்து மூன்று முறை கடித வடிவில் மிரட்டல் விடுத்ததாகவும், அதில் உச்சமாக ஒரு ஓணம் பண்டிகையின் முதல் நாளில் மனிதக் கழிவை தனக்கு பார்சலாக அனுப்பி வைத்து மிரட்டியதாகவும் அவர் சொன்னது கடும் அதிர்வை ஏற்படுத்தியது.
ஜனபக்ஷம் கட்சியை நடத்தி வரும் பி.சி.ஜார்ஜ், பாஜகவுடன் மிக நெருக்கமாக இருந்து வருகிறார். கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் இவரது கட்சி பாஜக கூட்டணியை ஆதரித்தது. அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் இவர் பாஜக அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பாஜக சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி திரட்டப்பட்ட போதும், கிறிஸ்தவரான பி.சி.ஜார்ஜ் தனது பங்காக ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை சமூகத் தினரின் வாக்கு கிடைக்காது என்பதால் கடைசி நேரத்தில் தனித்துப் போட்டியிட்டார்.
இந்நிலையில் பி.சி.ஜார்ஜ் நேற்று தனது முகநூல் பக்கத்தில், ‘ரமலான் நோன்பு திறக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துகள்’ என பதிவிட்டிருந்தார்.