பணக்கார, தி.மு.க.,வினரின் வீடுகளில், ‘ரெய்டு’ நடப்பதால், அக்கட்சியின் தேர்தல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும், தி.மு.க., வேட்பாளர்கள் காட்டில் பண மழை பொழிகிறது. எந்த தடையுமின்றி, அவர்களுக்கு தேர்தல் செலவுக்கு பணம் வந்து சேருகிறது. ‘ஹவாலா ஏஜன்ட்’கள் வாயிலாக, ‘கேஷ் சப்ளை’ நடப்பதாக, ஐ.டி.,க்கு முதல்கட்ட தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ‘மாஜி’ அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலு வீடுகளில், ‘ரெய்டு’ நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில், தி.மு.க.,வின் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களால், பணத்தை வெளியில் எடுக்க முடியவில்லை. அவர்களுக்கான பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள், ‘ரியல் எஸ்டேட் புரோக்கர்’களும் கண்காணிக்கப்படுவதால், அவர்களாலும் உதவ முடியவில்லை.
வேலு வீட்டில் நடத்திய சோதனையில், அதிகாரிகளுக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. எந்த இடத்தை மையமாக வைத்து, பணப் பரிமாற்றம் நடக்கிறது என்பதும், தெரிய வந்திருக்கிறது. அதன் பிறகே, ஸ்டாலின் மகள் வீடு பிரதான இலக்காக மாறியது.
மகள் வீட்டில், ‘ரெய்டு’ என்பது ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தியதற்கு சமம் என்பதால், தி.மு.க., வட்டாரம் ஆடிப் போயிருக்கிறது. அந்த வீடு, ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்று பிரமாண்டமாக இருப்பதால், வாக்காளர்கள் மத்தியில் அது வேறு விதமாக பேசப்படுமே என்ற பயமும், அவர்களுக்கு வந்து விட்டது.
ஜெயலலிதா வீட்டில் நடந்த சொத்து கணக்கெடுப்பை சாக்கிட்டு, அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையை, தி.மு.க., ‘டிவி’ சேனல்கள் எப்படி மக்களிடம் சித்தரித்தனவோ, அதே பாணியில், அ.தி.மு.க., இனி ஸ்டாலின் மகள் வீட்டை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் என, எதிர்பார்க்கலாம்.
ரெய்டுகளை பா.ஜ., அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக வர்ணித்து, மக்களின் அனுதாபத்தை பெற, தி.மு.க., கூட்டணி கட்சிகள் முயற்சி செய்யலாம்.ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், இமாச்சல பிரதேசத்தில், முதல்வரின் வீட்டிலேயே வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பெரிய தொழிலதிபர்கள் என, வரித்துறையின் சோதனைகள் எவரையுமே விட்டு வைப்பது இல்லை என்பதால், அனுதாப ஓட்டு பெறும், தி.மு.க.,வின் முயற்சிக்கு பலன் கிடைப்பது கேள்விக்குறியே.