அரக்கோணம் இரட்டைக் கொலையை மையமாக வைத்து தமிழகத்தில் சாதி கலவரத்தை ஏற்படுத்த திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிக்கின்றன என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தடை விதிக்கக்கோரி மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். முன்னதாக அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அம்பேத்காரை பாஜக எப்போதும் கொண்டாடி வருகிறது. அம்பேத்கார் தேசியத் தலைவர், உலகம் போற்றும் தலைவர், ஒரு சாதிக்கான தலைவர் அல்ல.
ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்காரை ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமான தலைவராக மக்கள் மத்தியில் திணித்து வருகிறது.
இந்த முயற்சியை பாஜக தடுத்து நிறுத்தும். அம்பேத்கார் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதில் பாஜகவுக்கு நிகர் பாஜக தான். அம்பேத்காரை முழுமையாக கொண்டாட உரிமையுள்ளவர்கள் பாஜகவினர் மட்டுமே. வேறு எந்தக்கட்சிகளுக்கும் அந்த உரிமையில்லை.
மதுரையில் பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அம்பேத்கார் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரட்டியடித்துள்ளனர். இதில் தொடர்புடைய விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீஸார் கைது செய்ய வேண்டும். அதுவரை பாஜக ஓயாது.
திருமாவளவனுக்கு இனிமேல் அரசியல் இல்லை. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் விடுதலைக் கட்சியினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதனால் திருமாவளவன் சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளார். அந்த நோக்கத்தில் தான் அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்தை கையாண்டு வருகிறார்.
அரக்கோணம் சம்பவத்தில் தொடர்புடையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அரக்கோணம் கொலையை மையமாக வைத்து அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இதை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பாஜகவினர் அன்பானவர்கள், பாசமானவர்கள், சட்டத்துக்கு உட்பட்டவர்கள். இதனால் விடுதலை சிறுத்தைகளிடம் பாஜகவினர் அடி வாங்கிக் கொண்டிருந்தனர்.
இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுரையில் பாஜகவினர் மீதான தாக்குதலை திருமாவளவன் தூண்டிவிட்டுள்ளார். அவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவன் தங்கள் கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் எல்.முருகன் கூறியதாவது:
பி.எம் கேர்ஸ் நிதி குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு கேள்வி கேட்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. எதிர்க்கட்சிகள் கேள்விகளை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது, அரசுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதனால் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றார்.