அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி.,க்கள், எந்த பதவியை ராஜினாமா செய்வர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.
அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், அமைச்சராக வேண்டும் என்பதற்காக, இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.
கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியிலும்; வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியிலும் களமிறங்கினர். இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியை பறிகொடுத்துள்ளது. எனவே, இருவரும் எம்.பி., பதவியில் தொடர்வரா அல்லது துறப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.பி., பதவியை தொடர்ந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அந்த தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்கும். எம்.எல்.ஏ., பதவியில் இருந்தால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது, எம்.பி., பதவிக்கு இடைத்தேர்தல் வரும்.எனவே, இவர்கள் இருவரால், எம்.பி., பதவி அல்லது எம்.எல்.ஏ., பதவிக்கு, இடைத்தேர்தல் வருவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க., – எம்.பி., முகமது ஜான் மறைவு காரணமாக, அவரது எம்.பி., பதவி காலியாக உள்ளது.