தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இறுதியில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இதில் திமுக மட்டும் பெருபான்மை பலத்துடன் 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், அதிமுக 65 இடங்களும் பாமக 5, பாஜக 4, இதரவை 1 என 75 இடங்களையும் பெற்றது. திமுக பெரும்பான்மை பெற்றதால் அதிமுக ஆட்சியை இழந்தது.
இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு ராஜினாமா கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.