ஆனி ஊஞ்சல் உற்சவத்தினை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் அருட்பாலித்தார். கொரோனா காலமாக இருப்பதால் பக்தர்கள் பங்கேற்பு இன்றி கோவில் வளாகத்தில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பொன்னூசல் ஆடி ஆருளும் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 15ஆம் தேதி மாலை தொடங்கியது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 12 மாதங்களும் திருவிழாகோலம்தான். சித்திரை திருவிழா தொடங்கி பங்குனி உத்திரம் வரைக்கும் திருவிழாக்களை நடைபெறும்.
ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரம் தொடங்கி மூல நட்சத்திரம் வரையில் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கடந்த 15ஆம் தேதி ஆனி உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆனி மாத பவுர்ணமி நாளன்று உச்சிகால நேரத்தில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெறும்.
கொரோனா காலமாக இருப்பதால் தினசரியும் கோவில் வளாகத்திலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் பக்தர்கள் அம்மை அப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு ஜூன் 15 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற இருந்த திருவிழாக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.