பிரதமர் மோடி இன்று நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கொரோனா முன்னணி பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சித் திட்டத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், “பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கொரோனா வைரஸ் இன்னும் நம்மிடம் உள்ளது. இது உருமாற்றத்தை அடைய வாய்ப்புள்ளது.
கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கொரோனா 2 வது அலைகளில், கொரோனா வைரஸ் நமக்கு முன் என்ன வகையான சவால்களைக் கொண்டு வந்துள்ளது என்பதைக் கண்டோம். இன்னும் கூடுதலான சவால்களை எதிர்கொள்ள தேசம் தயாராக உள்ளது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கொரோனா முன்னணி பணியாளர்களைத் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி கொரோனா ஊழியர்களை 6 வெவ்வேறு பணிகளுக்கு தயார் செய்யும். அதாவது. வீட்டு சிகிச்சை உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, நவீன சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரி சேகரிப்பு உதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகியவை இந்த பாடத்திட்டத்தில் தனித்தனியாக கற்பிக்கப்படும்.
இந்த திட்டம் பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா 3.0 மூலம் ரூ .276 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த சிறப்பு பயிற்சி மருத்துவரல்லாத சுகாதார நிபுணர்களை உருவாக்கும். அவற்றின் மூலம், சுகாதாரத் துறையால் எதிர்கால மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆக்ஸிஜன் தேவைகளை உறுதி செய்வதற்காக சுமார் 1,500 ஆக்ஸிஜன் ஆலைகளை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன, ”என்றார்.