Type Here to Get Search Results !

காருண்யாநகரில் காளான் போல் பெருகிவரும் தேவாலய கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை 'கண்டு கொள்ளாத போலீசார்'

 


கோவை அருகே காருண்யா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பல பிரார்த்தனை அரங்குகள் மற்றும் தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை அந்தந்த ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமலேயே காளான் போல் பெருகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை மனுவை தாக்கல் செய்த வக்கீல் ரங்கராஜு கூறியதாவது:கோவை மாவட்டம், மத்வராயபுரம், பூலுவபட்டி, இக்கரை போளுவாம்பட்டி, ஆலாந்துறை ஊராட்சிகள் மற்றும் அவற்றை சுற்றிலும், கடந்த 10 ஆண்டுகளில், பல புதிய தேவாலயங்கள், பிரார்த்தனை மண்டபங்கள் முளைத்துள்ளன.

இந்த நான்கு ஊராட்சிகளில் உள்ள, 18 தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை மண்டபங்கள், உள்ளாட்சி நிர்வாக ஒப்புதலுடன் கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து தகவல் அறியும், உரிமை சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டது.மத்வராயபுரம் மற்றும் பூலுவபட்டி ஊராட்சிகளின் தகவல் அலுவலர் பதிலளிக்கையில், 'தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை கூடங்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என, தெரிவித்துள்ளார்.

மத்வராயபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில், பெந்தெகொஸ்தே மிஷன், சி.எஸ்.ஐ., கிறைஸ்ட் சர்ச், பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மண்டபம், ஹோலி இன்னசன்ஸ், அகாப்பே ஆராதனை மண்டபம், அன்னை காருண்யா கத்தோலிக்க தேவாலயம், அன்னை வேளாங்கண்ணி மாதா பிரார்த்தனை மண்டபம் மற்றும் ஞான பயிலகம் ஆகியவை அடங்கும்.

பழங்குடி மக்களைக் கவரும் வண்ணம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த வழிபாட்டுத் தலங்களில், இறைச்சி விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. பிறகு அவர்கள் படிப்படியாக கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்படுகின்றனர்.

இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் குறித்து, இதே போன்ற தகவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு, இதுவரை எந்த பதிலும் வரவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

காருண்யா மறுப்புகாருண்யா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில், '' எந்தவொரு சட்டவிரோத கட்டுமானத்தையும் காருண்யா கட்டவில்லை. காருண்யா என்பது ஒரு தொண்டு நிறுவனம்; கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கு சேவை செய்வதற்காக மட்டுமே,'' என்றார்.

கலெக்டர் ராஜாமணியிடம் கேட்டபோது,''ஜெபகூடங்கள், தேவாலயங்கள், கோவில்கள் எதுவாயினும், சட்ட ஒழுங்கு தீவிர மாகக் கண்காணிக்கப்பட்ட பிறகே, அனுமதி வழங்கப் படுகிறது. குடியிருப்பு இடங்களுக்கு நடுவே புதிதாகக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. கடந்த காலங்களில் இதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்பது உண்மை.

தற்போது, சட்ட ஒழுங்கு ரீதியாக இதை கண்காணித்து வருகிறோம். நீங்கள் கூறியுள்ள ஆர்.டி.ஐ., தகவல் குறித்து விசாரித்த பின் தெரிவிக்கிறேன்,'' என்றார்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''மத மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு தான், காருண்யா இந்த தேவாலயங்களை நிர்மாணித்து வருகிறது. நாங்கள் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய முனைந்தால், காருண்யாவுடன் கை கோர்க்கும் போலீசார், எங்கள் புகார்களை பதிவு செய்வதில்லை.

இந்த கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தின்போதும் சமூகப் பிரார்த்தனை அரங்குகளில் மத மாற்ற முயற்சி நடந்தது. இது குறித்து புகார் தெரிவித்தபோது, போலீசார், 'கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல் தொடர்பான வழக்குகளை மட்டுமே பதிவுசெய்தனர். மத மாற்றக் குற்றச் சாட்டை கண்டு கொள்வதில்லை,'' என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.