சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் சபாநாயகர் இவ்வாறு அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நாராயணசாமி ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ராஜினாமா செய்த நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார்.அதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்து பேசினார். அப்போது புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்றார். தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆனால் அதை கடந்தும் ஆட்சி நிறைவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். கொடுத்த 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அரசு புதுச்சேரியை புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் கட்சிக்கு உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்றார். கொள்கை பிடிப்புடன் இருக்க வேண்டும் தங்களை யார் இந்த நிலைக்கு உயர்த்தினர் என்பதை எண்ணிபார்க்க வேண்டும். கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டும், அன்னை சோனியா காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் விசுவாசமாக இருந்திருக்க வேண்டும் என கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் குறித்து அவர் இவ்வாறு விமர்சித்தார். பெட்ரோல், டீசல் சிலிண்டர் விலையை உயர்த்தியது மத்திய அரசின் சாதனை, எதற்கெடுத்தாலும் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஏவுவதால் காங்கிரஸ் உறுப்பினர்களை பாஜக அச்சுறுத்தி வருகிறது என விமர்சித்தார். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது, இது துரோகம் இல்லையா? இப்படி தொடர்ந்து நாராயணசாமி மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் துஷ்பிரயோகத்தை எதிர்க்கட்சிகள் ஆதரித்தால் அது அவர்களுக்கு பாதகமாக முடியும் என கூறினார்.
தனது அரசு சிறப்பாக செயல்பட்டதால், தனது ஆட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரினார். அப்போது நாராயணாமியின் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்ததாக சபாநாயகர் அறிவித்தார். நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நாராயணசாமி ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சியினர், நாராயணசாமி தொடர்ந்து பொய் கூறி வந்ததை வாடிக்கையாக வைத்திருந்த நிலையில், அவரின் ஆட்சி கவிழ்ந்துள்ளது என்றும், காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பிரதமர் மன்மோகன்சிங், அதேபோல புதுவையில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசி முதல்வர் நாராயணசாமிதான் என்றனர்.