வரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி தி.நகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ள நிலையில் சசிகலாவின் நிலைப்பாடு குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் வருகிற 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். சசிகலா வெளிவந்த பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அதில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.