புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது. நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்ததால், இன்று மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது எனக்கூறி முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதனைத்தொடர்ந்து பேசிய நாராயணசாமி, 4 ஆண்டுகால காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். கொரோனா காலத்தில் மக்களுக்காக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சிறப்பாக சேவையாற்றினர். புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
புதுச்சேரி அரசுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்றும் கேட்டோம், ஆனால் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்தோம், கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை எல்லாம் முடித்துள்ளோம். துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அளித்த நெருக்கடிகளை எல்லாம் கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ய உள்ளோம். இலவச அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கும் கிரண்பேடி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.