Type Here to Get Search Results !

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து..... தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பரபரப்பு தகவல்..!

 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தார். அவருடன் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், உமேஷ்சின்ஹா உள்ளிட்டோர் வந்திருந்தனர். நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும், தமிழக தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். இன்று வருமான வரித்துறை , ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா;- தலைமை செயலர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். ஏற்கனவே அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எப்போது போல், வரும் தேர்தலிலும் தமிழகத்தில் அதிகளவு ஓட்டு பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். புதிய வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஓட்டுப்போட ஏதுவாக வசதிகள் செய்யப்படும். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பீகார் தேர்தல் நடத்தியது சவாலாக இருந்தது.

வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களே தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள். சட்டம் ஒழுங்கை பார்வையிட மத்திய அரசு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். 

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதில் அரசியல் கட்சிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன.  வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது வீடியோ பதிவு செய்யப்படும்.   மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும், வாக்கு பதிவு மையங்கள் 68,000த்திலிருந்து 93,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 

கொரோனா காலத்தில் ஓட்டுப்போட கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டுப்போட நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.