பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானது முதலே அதிமுகவை கைப்பற்றிவிட வேண்டும் என துடிக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ இம்மியளவு கூட சசிகலா குடும்பத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. ஆனால் இது குறித்து ஓபிஎஸ் வாய் திறக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
சிறையில் இருந்து ரிலீஸ் ஆன நிலையில் சசிகலா குறித்து பேச அதிமுக நிர்வாகிகள் அனைவருமே தயங்கினர். ஆனால் சிறிதும் யோசிக்காமல் சசிகலா உடல் நலம் குணமாகி அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப். அத்தோடு அந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களிலும் வரவழைக்க ஓபிஎஸ்சின் பிஆர்ஓ டீம் முழு மூச்சாக இறங்கியது. அத்தோடு அனைத்து சேனல்களிலும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சசிகலாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கை பிளாஸ் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜெயபிரதீப் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். இது குறித்த தகவலும் முன்கூட்டியே ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்தோடு செய்தியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து சசிகலா வருகைகுறித்து ஜெயபிரதீப்பிடம் கேள்வி எழுப்பவும் செய்தது பிஆர் டீம். அதே போல் சசிகலா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மனிதாபிமான அடிப்படையில் சசிகலா உடல் நலம் குணமாகி அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதாக ஜெயபிரதீப் விளக்கம் அளித்தார். இந்த பேட்டியும் அனைத்து ஊடகங்களிலும் வருமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
அத்தோடு சசிகலாவை – ஓபிஎஸ் வரவேற்கச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இவை குறித்தெல்லாம் ஓபிஎஸ் தரப்பு அமைதி காத்தது. ஏனென்றால் இப்படிப்பட்ட தகவல்ளை எல்லாம் லீக் செய்ததே ஓபிஎஸ் தரப்பு தான் என்கிறார்கள். அதாவது எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகமாக சசிகலாவை பயன்படுத்த ஓபிஎஸ் தரப்பு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்பட்டது. ஆனால் சசிகலா தமிழகம் திரும்பிய பிறகும் ஓபிஎஸ் தரப்பு மிகவும் அமைதியாக இருந்து வருவது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு டென்சனை ஏற்படுத்தியுள்ளது.
மறுபடியும் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி பம்பரமாக சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார். சசிகலாவை மறுபடியும் அதிமுகவிற்குள் விடாமல் தடுக்கவும் அவர் ஏகப்பட்ட வியூகங்களை வகுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைச்சர்கள் தொடர்ந்து சசிகலாவிற்கு எதிராக பேசி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலாவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் பார்க்க முடியவில்லை. செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் மறுபடியும் சேர்ப்பது குறித்து யோசிக்கலாம் என்று கூறியது அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஆனால் இது கே.பி.முனுசாமியின் தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் சற்று காட்டமாகவே கூறினார். ஆனால் உண்மையில் சசிகலா – டிடிவி விவகாரத்தில் கே.பி.முனுசாமி கூறிய கருத்துகள் ஓபிஎஸ் தரப்பு கருத்தாகவே பார்க்கப்பட்டது. இதனால் தான் அது குறித்து பேசிய போது ஜெயக்குமார் டென்சன் ஆனதாக சொல்கிறார்கள். இதே போல் தமிழகம் திரும்பிய சசிகலாவின் இமேஜை டேமேஜ் ஆக்க எடப்பாடி தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இந்த விவகாரத்தில் சற்று தள்ளி நின்று கொண்டது. இதனால் சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தனி ஆளாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்சை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்க அனைத்துவிதமான வியூகங்களையும் பயன்படுத்திக் கொள்வார் எனப்பேசப்பட்டது. ஆனால் அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது அதிமுகவை பிளவுபடுத்தாத வண்ணம் இருக்க வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் அதிமுகவின் முக்கிய புள்ளிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் ஆகியோர் அடங்கிய 50 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முன்பே அறிவித்து அவர்களை அதிமுகவில் தக்க வைத்துக் கொள்வதற்காக திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில், ஓ.பி.எஸ் சசிகலா பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காக அவரது இளைய மகன் ஜெயபிரதீப்புக்கும் சீட் கொடுக்க முன் வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பிறந்த நாளில் 50 பேர் கொண்ட பட்டியல் வெளியாக இருந்த நிலையில் ஜெயபிரதீப்பின் பெயர் 51வது ஆளாக சேர்க்கப்பட்டுள்ளது.
மகனுக்காக இதனை ஏற்றுக்கொண்ட ஓ.பி.எஸ், சசிகலா டீமோடு இனி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என டீலை முடித்து விட்டாராம் எடப்பாடி பழனிசாமி.