Type Here to Get Search Results !

ராமேஸ்வரம் பற்றி அறியாத 120 தகவல்கள்…

1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம். 
2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது.
3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு.
4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது.
5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு பரிவட்டம் சூட்டும் முறை இன்றும் இருந்து வருகிறது.
6. தாய்லாந்து மன்னர் முடி சூட்டும் பொழுது கங்கை நீரினால் நீராட்டும் சடங்கு ஒன்று அங்கே உள்ளது. இதனைச் செய்பவர்கள் உச்சிக்குடும்பி வைத்துள்ள ஆத்திக மக்கள். இவர்களது முன்னோர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்று தாய்லாந்தில் நிலைத்தவர்கள்.
7. பாரத நாட்டின் மிகுந்த புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேசுவரம் எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. இவை துவாரகநாத், பத்ரிநாத், கேதாரிநாத் என்ற வைணவத் தலங்கள்.
8. ராமேசுவரம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து சேதுபதி மன்னர்களை கவுரவிக்கும் வகையில் சேதுபதி ஈஸ்வரர் என்ற பெயரில் சிறு கோவில் ஒன்று ராமேசுவரம் கோவிலில் உள்ளது. அணுக்க மண்டபத்திற்கு வடமேற்கு மூலையில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
9. ராமேசுவரம் கோவிலின் வழிபாடுகள், விழாக்கள், ஆகியவற்றைக் காலமெல்லாம் சிறப்பாக நடைபெற சேதுபதி மன்னர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
10. விழாக்காலங்களில் இரவு நேரங்களில் கோவிலினை அடுத்த பரந்த வெளிகளில் ராமாயணக் கதையை எளிதாக மக்களுக்கு உணர்த்தும் வகையில் எளிய இனிய ஒயில் ஆட்டக்காரர்களின் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் முன்பு நடைபெற்று வந்தன. இப்போது அந்த வழக்கம் இல்லை.
11. ராமேசுவரம் கோவிலின் மண்டபங்கள், சன்னநிதிகள் முதலியவை பாண்டிய நாட்டு முறையில் காணப்படுகின்றன. 40 அடிகள் நீளமுள்ள பெருங்கற்களினால் செய்யப்பட்ட உத்திரங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
12.செதுக்கி மெருகிடப்பட்ட ஒருவகைக் கருப்புக் கல்லால் கருவறை கட்டப்பட்டுள்ளது.
13. இக்கோவிலுள்ள நந்தி வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உடையதாக விளங்குகின்றது.
14.மூன்றாம் பிரகாரத்திலிருக்கும் ராமலிங்கப் பிரதிஷ்டை உருவங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. அவ்வுருவங்கள் உயிருள்ளவை போன்றே விளங்குகின்றன.
15.அனுப்புமண்டபம், சுக்கிர வார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை விசாலமாகவும் காற்றோட்டம் மிக்கவையாகவும் அமைக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்புடையது.
16.கோவிலில் உள்ள உலோகத்தினால் செய்யப் பட்ட குதிரைச்சொக்கர் உருவம் மிகவும் கம்பீரமாக கலைத்திறன் மிக்கதாக காணப்படுகிறது.
17.ராமநாதர் கோவிலிலிருந்து 1903,1905,1915 -ம் ஆண்டுகளில் அரசாங்கத்தார் பல கல்வெட்டுக்களை படியெடுத்து பதிவு செய்துள்ளனர்.
18.அம்பிகை சன்னதியில் உள்ள தூண் ஒன்றின்மீது “இரணிய கர்ப்பயாஜிவிஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர்” என்ற பொறிக்கப்பட்டுள்ளது.
19.முதல் பிரகாரத்திலிருந்து வெளிவரும் வாயிலில் உள்ள கதவுக்கு மேல்புறமுள்ள ஒருகல்வெட்டில் சைவ ஆகமங்களில் வல்லவரான ராமநாதர் என்ற பெருந்துறவி அழிந்து போன பிரகாரத்தை கட்டினார் என்ற கூறப்படுகின்றது.
20.பள்ளியறையில் உள்ள வெள்ளி ஊஞ்சலின் முன்பக்கம் விஜயரகு நாத சேதுபதிகட்டதேவரால் அளிக்கப்பட்டது என்றும் வெள்ளியின் நிறையும் மதிப்பும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
21.முதற்பிரகாரத்தின் வடசுவரில் உள்ள கல்வெட்டில் சகம்1545 (கி.பி.1623) ஆம் ஆண்டில் நடமாளிகை மண்டபம்,அர்த்த மண்டபம் இவற்றை உடையான் சேதுபதி கட்டத்தேவர் மகன் கூத்தன் சேதுபதிகட்டத்தேவர் கட்டியதாக கூறப்பட்டுள்ளது.
22. அம்பிகை சந்நிதியிலுள்ள கொடிமரத்தில் கோபதிப்பர் சகம் 1390 (கி.பி.1468) ஆம் ஆண்டில் அதை நிலைநிறுத்தியதாகக் கூறும் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
23.ராமநாதர் கருவறை நுழைவாயிலில்உள்ள கன்னடக் கல்வெட்டு ஒன்று ராமநாதருக்கு கவசம் அளிக்கப்பட்டதை கூறுகின்றது.
24.தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம்.
25. ராமேஸ்வரம் கோவிலின் கருவறையில் ராமநாத சுவாமிக்கும் ஏனைய இறைமேனிகளுக்கும் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகிய தெய்வ கைங்கரியங்களில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டு இருப்பவர்கள் மராட்டிய பிராமணர்கள் ஆவர். இது தமிழக திருக்கோவில்களில் வழிபாட்டு நடை முறைகளுக்கு வேறுபட்ட ஒன்று ஆகும்.
26. ராமேசுவரத்தில் பூஜை செய்யும் மராட்டிய பிராமணர்கள் மொத்தம் 512 பேர் என்பதும் அவர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு முதல் ராமேஸ்வரத்தில் இருந்து வருவதும் தெரிய வருகிறது. இவர்களைப் பண்டாக்கள் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.
27.ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் ராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது.
28. காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான் அக்காசியாத்திரை முழுமை பெறும் என்பது இந்து சமயத்தவரின் கொள்கை- நம்பிக்கை.
29. இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்புடையது.
30. பாடல் பெற்ற சிவதலங்களுள் இத்தலமும் ஒன்று. இத்தலத்தை திருஞான சம்பந்த சுவாமிகள் இரண்டு திருப்பதிகங்களாலும், திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தாலும் போற்றிப்பாடியுள்ளனர்.
31. இத்தலத்திற்கு தமிழிலும், வடமொழியிலும் நூல்கள் உண்டு. மிகப்பழைய நூல்களிலெல்லாம் இத்தலம் குறிக்கப்பெற்றுள்ளதால் இதன் பழமைச் சிறப்பு நன்கு விளங்குகின்றது.
32.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இதுவாகும்.
33.ராமேஸ்வரத்திற்கு `கந்தமானதனபர்வதம்’ என்ற புராணப்பெயரும் உண்டு.
34. ராமேசுவரம் கோவில் பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி. இக்காலத்தை போல போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் இத்துணை கற்களை கொண்டு ராமேசுவரம் தீவில் இத்திருக்கோவிலை நம் முன்னோர்கள் எவ்வாறு எழுப்பினார்கள் என்பது வியப்பாக உள்ளது.
35. பெர்கூசன் என்னும் அறிஞர், “திராவிடக் கட்டிடக் கலையமைப்பின் சிறப்பை ராமேசுவரம் கோவிலில் முழுமையாக காண முடியும். அதே நேரத்தில் கட்டிடக் கலையின் குறைபாடுகள் உள்ள ஒரு கோவிலை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அதற்கும் ராமேசுவரம் கோவிலைத்தான் காட்ட முடியும்” என கூறியுள்ளார்.
36. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு என்ற மன்னன் இக்கோவிலை புதுப்பித்ததாக தெரிய வருகின்றது.
37. சுவாமி விவேகானந்தர் 1897-ம் ஆண்டு ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்து “உண்மை வழிபாடு” என்னும் பொருள் பற்றி ஓர் அரிய சொற்பொழிவாற்றினார்.
38. ஆனி மாதம் நடைபெறும் பிரதிஷ்டை விழாவும், ஆடிமாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழாவும், ராமேசுவரம் கோவிலில் நடக்கும் மிகவும் சிறப்பான திருவிழாக்களாகும்.
39. தென்பாண்டி நாட்டிலே தேவாரப் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களுள் ஒன்றாகிய ராமேசுவரத்திற்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.
40. ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கிழக்கு கோடியில் உள்ள ராமேசுவரம் என்னும் தீவின் வடபாகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து 33 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
41. இத்தலத்திற்கு `தேவநகரம்’ `தேவை’ என்னும் திருப்பெயர்களும் உண்டு.
42. கந்தமாதனம், தனுஷ்கோடி, தர்ப்பசயனம் ஆகிய மூன்றும் உள்ளதால் “முக்தி தரும் சக்தி உடைய தலம்” என்ற சிறப்பை ராமேசுவரம் பெற்றுள்ளது.
43. ராமபிரான் ராமேசுவரத்தில் மட்டுமல்ல வேதாரண்யம், பட்டீசுவரத்திலும் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
44. ராமேஸ்வர சேதுக்கடல் தீர்த்தம் 2 லட்சம் மைல் சுற்றி, சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
45. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலின் கீழ் உள்ள மூலிகைகள் கடல் மேல் மட்டத்துக்கு வந்து சேது கரையில் மட்டுமே ஒதுங்குவதையும் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
46. கயிலாய மலையில் உள்ள மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ் கோடியில் சங்கமம் ஆவதாக நம் முன்னோர்கள் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.
47. ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் அந்த காலத்தில் 36 நாட்கள் தங்கி இருந்து தீர்த்தமாடி செல்வார்கள். அது மெல்ல, மெல்ல குறைந்து தற்போது ராமேசுவரத்துக்கு ஒரே நாளில் சென்று விட்டு வந்து விடுகிறார்கள்.
48. ராமேஸ்வரம் தல யாத்திரையில் முக்கிய அங்கம் வகிக்கும் தேவிபட்டினம். சூரியனாக கருதப்படுகிறது. பாம்பன் பைரவராகவும், ராமேசுவரம் அம்பாளாகவும், தனுஷ்கோடி சேதுவாகவும், திரும்புல்லாணி மகா விஷ்ணுவாகவும், உத்தரகோடி மங்கை நடராசர் ஆகவும் கருதப்படுகிறது.
49. ராமேசுவரம் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடும் போது நிதானமாக நீராட வேண்டும். சில வழிகாட்டிகள் பக்தர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நீராட வைத்து விடுகிறார்கள்.
50. ராமேசுவரம் கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவ சத்துக்கள், மின் காந்த அலைகள் உள்ளன. தீர்த்தம் உங்கள் தலையில் நன்கு பட்டால்தான் அந்த சக்திகளை நீங்கள் முழுமையாக பெற முடியும்.
51. ராமேசுவரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளை கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது.
52. ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் உள்ளன.
53. ராமேசுவரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு வைணலிங்கம் என்றுபெயர்.
54. ராமேசுவரம் மூலவரை தொட்டு பூஜை செய்யும் உரிமை காஞ்சி பெரியவர், சிருங்கேரி மகா சன்னிதானம்,நேபாள நாட்டு மன்னர் ஆகிய 3 பேருக்கும் மட்டுமே உண்டு.
55. ராமபிரான் சூரிய குலத்தை சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேசுவரம் தலம் திகழ்கிறது.
56. ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜை செய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சன்னிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
57. ராமேசுவரம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் புத்திரபேறு, நாகதோஷம் நிவர்த்தி இரண்டையும் உறுதியாகப் பெறலாம்.
58. ராமேசுவரம் தலம் தோன்றி 10 சதுர்யுகம் ஆகிறது என்கிறது ஒரு குறிப்பு. அதன்படி கணக்கிட்டால் ராமேஸ்வரம் கோவில் தோன்றி சுமார் 4கோடி ஆண்டுகள் ஆகிறது.
59. ராமனுக்கு உதவிய குகன் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அந்த குகனின் வழித் தோன்றல்கள் தான் சேதுபதி மன்னர்கள் என்று கருதப்படுகிறது.
60. ராமேஸ்வரம் கோவில் கட்டுமானத்துக்கு இலங்கை திரிகோண மலையில் இருந்து பிரமாண்டமான கருங்கற்கள் வெட்டி எடுத்து வரப்பட்டது.
61. 1693-ல் ராமேஸ்வரம் கோவிலை தகர்க்க முயன்றனர். சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வெகுண்டு எழுந்து ராமேசுவரம் கோவிலை காப்பாற்றினார்கள்.
62. ராமேசுவரம் கோவிலுக்கு அள்ளி, அள்ளி கொடுத்த சேதுபதி மன்னர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகும் என்று தாயுமானவர் சாபம்விட்டாராம். எனவே தான் அந்த அரச குடும்பம் பலதடவை வாரிசு இன்றி போனதாக சொல்கிறார்கள்.
63. 1803-ல் சேதுபதிகளின் வாரிசு பலவீனத்தால் ராமேஸ்வரம் ஆலய உரிமையை மன்னர் குடும்பம் இழந்தது. 1853-ல் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்துக்காக ஒரு குழுவை ஏற்படுத்தினார்கள். பாஸ்கர சேதுபதி மன்னர் லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை சென்று போராடி 1893-ல் ஆலய உரிமையை மீட்டார்.
64. 1901-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஆலய நிர்வாகத்தை ஏ.எல்.ஆர். அருணாச்சலம் செட்டியார் ஏற்றார்.
65. ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான மண்டபங்கள் உள்ளிட்ட திருப்பணிகளை செய்ய வட மாநில கோடீசுவரர்கள் பலர் முன் வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை செயல் வடிவம் பெறாமல் போய்விட்டது.
66. ராமேஸ்வரம் கோவில் ராஜ கோபுரத்தில் பல தடவை பழுது ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது.
67. ராமேசுவரம் கோவிலுக்கு 1975-ம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் கும்பாபிஷேகம் சீராக நடத்தப்படவில்லை.
68. ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதால் கோவிலின் பெரும் பகுதி எப்போதும் ஈரமாக மாறி விடுகிறது. சிலர் அதில் வழுக்கி விழுகிறார்கள். இதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தால் நல்லது.
69. ராமேசுவரம் ராமநாதரை நேபாள மன்னர்கள் மட்டுமின்றி தாய்லாந்து, மைசூர், திருவிதாங்கூர் மன்னர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.
70. 1925-ல் ராமேசுவரம் கோவிலில் கடல் அரிப்பு ஏற்பட்டது. அம்பா சமுத்திரத்தில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் கருங்கற்கள் கொண்டு வந்து கடல் அரிப்பை தடுத்து ஆலயத்தை விரிவுபடுத்தினார்கள்.
71. ஆங்கிலேயர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவிலே மிகச் சிறந்த ஆலயம் என்று ராமேசுவரம் கோவிலை கூறினார்கள்.
72. மத்திய அரசு 1951-ல் இனாம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்ததால் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பறி போனது.
74. ராமேஸ்வரம் கோவில் ஆலய நிர்வாகத்தை 1959-ம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை ஏற்றது.
75. ராமேசுவரம் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் உண்டியல் வசூல் மிகவும் குறைவாகவே வருகிறது.
76. ராமேசுவரம் கோவிலில் சுமார் 300 பேர் நிரந்தர ஆலய ஊழியர்களாக உள்ளனர்.
77. ராமேசுவரம் கோவிலுக்கு சேதுபதி மன்னர்கள் செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர், நட்சத்திரங்கள் இன்றும் மூலவர் முன்பு சங்கல்பத்தில் ஓதப்படுகிறது.
78. ராமேசுவரத்தில் உள்ள ஜோதிலிங்கம், இந்தியாவில் உள்ள ஜோதிலிங்கங்களில் 7-வது லிங்கமாக கருதப்படுகிறது.
79. ராமேசுவரம் தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் இன்னும் பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியில் நெய் ஊற்றி விளக்கை எரிய வைத்தால் ராகு-கேது தோஷம் நீங்கும். 80. ராமேசுவரம் கோவிலில் வைணவ ஆலயங்களில் கொடுப்பது போல தீர்த்தம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
81. நேபாள நாட்டு பக்தர் ஒருவர் ஒரு லட்சம் ருத்ரங்களால் ஆன ருத்ராட்ச பந்தல் ஒன்றை இத்தலத்தில் அனைத்து கொடுத்துள்ளார்.
82. ஐதீகப்படி ராமேசுவரத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.
83.1935-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின் வெள்ளி விழா ஆண்டாகும். அப்போது ராமேசுவரம் கோவில் இந்திய அஞ்சல் தலைகளில் பொறிக்கப் பெற்றது.
84. இதிகாச புராண காலத்திலிருந்தே ராமேசுவரம் புனித பூமி என்று இந்தியா முழுவதும் பேசப்பட்டது.
85. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காலம் தெரியாத காலத்தில் பாடியவற்றைச் சங்க இலக்கியம் என்று தொகுத்தார்கள். அதில் அகநானூறு தனுஷ்கோடி பற்றிப் பேசுகிறது.
86. சேது என்ற சொல்லுக்கே பாலம் என்பதுதான் பொருள். அந்தப் பாலத்தையே ஒரு பாலத்தின் மூலமாக நாம் கடக்கிறோம்.
87. தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர்களை விட வடநாட்டுக்காரர்களே மிகுதியாக ராமேசுவரத்தைத் தரிசிக்கிறார்கள். ஆண்டு தோறும் இங்கு வருவதை ஓர் ஆன்மீகப் பயணமாகவே வடமாநிலத்தவர்கள் எண்ணியுள்ளார்கள்.
88. முத்துப்பேட்டைக்கு அருகில் திருவான்மியூரிலும் ராமன் இலங்கை போகும்போது இறைவனை வணங்கி வழி கேட்டிருக்கிறான். அந்த இடம் திருஉசாத்தானம் என்று அழைக்கப்படுகிறது.
89. காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமிசாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, குடந்தை, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருமுதுகுன்றம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருக்காளத்தி ஆகிய பகுதிகளில் ஓராண்டு தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் நீராடி ராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம்.
90.காசியில் இறப்பது முக்தி தரும், பாணலிங்கம் பல திரளும், நர்மதையில் விரதம் இருப்பது முக்தி தரும், பொறாமையால் போர்க்களமாகிய குருசேத்திரத்தில் பிறருக்குத் தானம் செய்வதே முக்தி தரும் அந்த மூன்று பலனையும் ஒன்றாக்கித் தரும் பெருமை ராமேசுவரத்திற்கே உண்டு.
91. இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் சி.வி.மாவ்லங்கர் ராமேசுவரம் கோவில் இந்திய தேசியச் சொத்து எனவும் ஒருமைப்பாட்டுக்கு உதவும் சாதனம் என கூறியதைக் கோவில் குறிப்பேடுகளில் காணலாம்.
92. மண்ணினால் லிங்கம் செய்தாள், சீதை. அதனால் ராமேசுவரத்தில் யாரும் மண்ணை உழுது பயிர் செய்வதே இல்லை.
93. ஆவுடையாராக நிலமே இருக்க பாணலிங்கமாக மட்டுமே இருக்கும். ராமலிங்கத்தைப் போல் இருப்பதால், செக்கை ஆட்டி எண்ணை எடுப்பதும் இவ்வூரில் இல்லை.
94. 1925-ல் முதல் குடமுழுக்கும், 27.2.1948-ல் இரண்டாவது குடமுழுக்கும், 5.2.1975-ல் மூன்றாவது குடமுழுக்கும் நடந்தன.
95. ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடியவுடன் உடம்பில் மின்சக்தி பாய்ந்தது போல் ஒரு சுறுசுறுப்பு உணர்வைப் பெற முடிகிறது.
96. புத்திரகாரகனாகிய குருவுக்குப் பகையான கிரகம் சுக்கிரன். புத்திரஸ்தானத்தில் விரோதமானதாகக் கருதப்படுபவர் சூரியனும் செவ்வாயும் ஆவர். எனவே மகப்பேறு விரும்பியவர்கள் மேற்கூறிய கிரகங்களுக்குரிய ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நீராடுவது கூடாது என்று விலக்கினார்கள். என்றாலும் சேதுவில் இக்காரணத்திற்காக இந்த நாட்களில் நீராடினால் தவறில்லை என்று கூறப்பட்டுள்ளது.
97. பிரேதத்திற்கு நீர்க்கடன் செய்யாதவன், கருவுற்ற மனைவியை உடையவன் வேறு தீர்த்தங்களில் நீராடுவதற்கு உரிமை இல்லை. ஆனால் சேதுவில் நீராடுவதற்கு இவர்களுக்கு தடையுமில்லை. காரணம் நீர்க்கடனுக்குரிய காசியின் பலனை சேது தரும். மேலும் மகப்பேறு தருவதில் இத்தலம் சிறந்திருக்கிறது.
98. தீர்த்தமே தெய்வமாயிருப்பதால் கடல் நீராட்டிற்கு விதிக்கப்பட்ட திதி, கிழமை, நட்சத்திரம் முதலிய நியமங்களை மீறியும் இங்கே என்றும் எப்போதும் ஆடலாம். பாதி உதயம், முழு உதயம் என்றெல்லாம் பார்க்காமல் நீராடலாம்.
99. பலதீபிகை என்னும் சோதிட நூல் கர்ம நாசத்துக்கு நாகப்பிரதிட்டை செய்வதற்குச் சேது உரியது என்று கூறுகிறது.
100. புத்திரதோஷம் எதுவாயினும் சேதுவில் நீராடினால், மறையும்.
101. காசிக்கு மட்டும் போய் வந்தால் போதாதாம். முதலில் ராமேசுவரம் சென்று நீராடி வணங்கிக் கடலில் மண் எடுத்துக் காசிக்குப் போய், கங்கையில் அதனைக் கொட்டி காசியிலிருந்து மீண்டும் வந்து மறுமுறையும் ராமேசுவரம் போய், காசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசியின் பலன் பூர்த்தியாகக் கிடைக்கும். இந்த மரபு தவறி காசிக்கு மட்டும் போய் வந்தால் பயனில்லை. இதைத்தான் காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது என்ற பழமொழி கூறுகிறது.
102. காசி முக்திக்குச் சிறப்புடையது. அதனால்தான் உயிரை உடனே விட விரும்பாமல் வேறு எதையாவது விட்டுவிட்டு வருகிறார்கள். ராமேசுவரமோ உரிய காலத்தில் முக்தியும் பிற்காலத்தில் போகமும் அருளும் பாக்கியமுடையதாகும்.
103. மிகுந்த சிறப்புடையது ராமேசுவரம் என்றாலும் தனுஷ்கோடிக்குப் போய் விட்டுத்தான் பிறகு ராமேசுவரம் வர வேண்டும்.
104. பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாகவும் சுற்றிலும் வளைந்த கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால் அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே ராமேசுவரமும் தனுஷ்கோடியும் நமக்கு ஆகாயத்தில் நின்று பார்க்கும்போது தெரியும்.
105. 1964-ல் அடித்த புயலில் ஓர் ரெயில் தனுஷ்கோடியில் தடம் புரண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். இருப்புப் பாதை மண் மூடிப்போனது. ராமேசுவரம் கோவில் அகதிகள் புகலிடமானது. மீனவர்களை தவிர வேறு யாரும் தனுஷ்கோடிக்குப் போய் மீண்டும் வாழ்வதற்கு இன்று வரை துணியவில்லை.
106. நம்பு நாயகியம்மன் என்னும் மாரியம்மன் கோவிலும் முன்பு தனுஷ்கோடியில்தான் இருந்தது. புயல் அழிவுக்குப் பின் நடராஜபுரத்தில் இருக்கிறது. ராமேசுவரத் தில் காவல் தெய்வங்களில் இதுவும் ஒன்று.
107. சித்தப்பிரமை கொண்டோர் சேதுவால் குணம் பெறுவர். 108.ராமேசுவரத்திற்கு பழைய பெயர் கந்தமாதனப் பர்வதம் என்பதே ஆகும். ராமனுக்குப் பின்தான் பெயர் மாறியது.
109. சிவனும் உமாதேவியும் ராமேசுவரத்தில் தினமும் வெளிப்படத் தோன்றியபடியுள்ளனர் என்று சேது தல புராணம் சொல்கிறது.
110. தனுஷ்கோடிக்குப் போனாலும் போகாவிட்டாலும் ராமேசுவரத்தில் உறுதியாக அக்னி தீர்த்திற்க்குப் போய் நீராடாமல் எந்த யாத்திரிகரும் திரும்ப மாட்டார். இன்றைய நிலையில் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதே நடைமுறையில் அதிகமாகி உள்ளது.
111. 78 அடி உயரமான மேற்குக் கோபுரத்தை சேதுபதிகள் முழுவதும் கருங்கல்லாகவே கட்டி விட்டார்கள். பெரும்பாலும் நிலையும் மேல் தளமும் வரைதான் கருங்கல்லாக இருப்பது வழக்கம். இவர்களோ கலசம் வரை அப்படியே கருங்கல்லாக கட்டியது ஒரு சிறப்பே ஆகும்.
112. கீழ்க் கோபுரம் கட்டிய தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். செட்டியார் குடும்பத்தினரும் 128 அடி உயரமாக அதே போல் கருங்கல்லாய்க் கட்டி விட்டார்கள். இக்கீழ்க்கோபுரம் 1649-ல் சேதுபதியால் தொடங்கப்பட்டுக் கைவிடப்பட்டதால், 1879 முதல் 1904-க்குள் ஜமீன்தார் இதைக் கட்டியிருக்கிறார். இலங்கை வடகரையில் நெடுந்தீவில் நின்று பார்த்தால் இக்கோபுரம் தெரியும்.
113. ராமன் நிறுவிய லிங்கம், அனுமன் லிங்கம், விசாலாட்சி, பருவதவர்த்தினி, நடராசர் ஆகிய ஐவர்க்கும் தனி விமானங்கள் உள்ளன. கோவில் பதினைந்து ஏக்கர் பரப்புள்ளது. நீளம் 865 அடியும் அகலம் 657 அடியும் உள்ள கோவில் இதுவாகும். சில உத்திரங்கள் 49 அடி நீளம் உடையவை ஒரே கல்லால் ஆகியவை.
114. வைணவத்தில் கருடசேவையும் சைவத்தில் ரிஷபவாகன காட்சியும் முக்தி தரும் என்பார்கள். அதுவும் கோபுர தரிசனமாகும்போது தான் இக்காட்சிகள் மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படும். அதற்கு ஏற்ப மண்டப உச்சியில் ரிஷபவாகனக் காட்சியும் பின்புறம் கீழைக் கோபுரம் இருப்பதும் முக்திதரும் தலத்தில் சிறந்த ராமேசுவரத்திற்கு மிகவும் உரியதாய் விளங்குகின்றன.
115. விஜயரகுநாத சேதுபதி (கி.பி. 1711 – 1725) நாள் தோறும் குதிரையில் வந்து ராமேசுவரத்தை வழிபட்ட பிறகே இரவு உணவு உண்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.
116.ராமேஸ்வரம் பகுதி பாண்டியர். சோழர்கள், சிங்களவர், விஜய நகரமன்னர், மதுரை நாயக்கர்கள், மறவர் சீமை அதிபதிகளான சேதுபதிகள் ஆகிய பல்வேறு அரசுகளின் ஆட்சிப் பகுதியாக இருந்தது.
117.ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு முதலில் மதுரை பாண்டிய மன்னர்களது ஆட்சிப் பகுதிகளாக இருந்தது.
118.கி.பி.பத்தாவது நூற்றாண்டில் பாண்டிய மண்டலத்தைக் கைப்பற்றிய பராந்தக சோழன் ராமேஸ்வரம் திருக்கோவிலில் துலாபாரம் நிகழ்த்தி அவனது நிறைக்குரிய பொன்னைக் கோவிலுக்கு அளித்தான் என்று கி.பி.932-ம் ஆண்டு வேளஞ்சேரி செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
119.மூன்றாம் பிரகாரக் கட்டுமானப் பணியைத் தொடங்கிய வரும் மிகச் சிறந்த சிவத் தொண்டராகவும் விளங்கிய முத்து விசய ரெகுநாத சேதுபதி (கி.பி.1713-1725) திருவாரூர் தச்சர்களைக் கொண்டு அழகிய தேர் ஒன்றை செய்து கோவிலுக்கு வழங்கினார். அதோடு அந்தத்தேர் ஓட்டத்திற்கு வடம் பிடித்து அவரே தொடக்கி வைத்தார்.
120. வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.*
நமசிவாய வாழ்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.