விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகை செல்வனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, எம்ஜிஆர் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக வாழ்ந்தவர்கள். ஆனால் திமுக தலைவர்கள் தங்களது வீட்டை காப்பாற்றும் தலைவர்களாக உள்ளனர். அதிமுகவிலிருந்து சென்ற பலருக்கு தற்போது திமுகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் ஸ்டாலினை விமர்சனம் செய்த செந்தில் பாலாஜிக்கு தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் தாங்கள் செய்ததை கூறாமல் என்னைப் பற்றி அவதூறு பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாரிசு அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கட்சி திமுக தான். திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்ற பின் தான் ஊழல் பெருகியது. 13 திமுக அமைச்சர்கள் மீது வழக்குகள் நடைபெற்று வருகிறது.
அதிலிருந்து அவர்கள் யாரும் தப்ப முடியாது. நாங்கள் எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை, மக்களின் நல்லதை மட்டுமே பார்க்கிறோம். பொய்யென்றால் திமுக, திமுக என்றால் பொய். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் நிகழாண்டு 435 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். அருப்புக்கோட்டை மக்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். எனவே இத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன் மற்றும் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளர் ராஜசேகர் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.