Type Here to Get Search Results !

27 நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்….

 

நவ கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் துன்பங்களையும் தீர்க்க நம்முடைய நட்சத்திர ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம். 27 நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபடலாம் என்று அறிந்து கொள்வோம்.

உங்களின் நட்சத்திர ஆலயங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. சூரிய திசை 6 வருடங்கள், சந்திர திசை 10 வருடங்கள், செவ்வாய் திசை 7 வருடங்கள், ராகுதிசை 18 வருடங்கள், குருதிசை 16 வருடங்கள், சனி திசை 19 வருடங்கள், புதன்திசை 17 வருடங்கள், கேது திசை 7 வருடங்கள், சுக்ர திசை 20 வருடங்கள் ஆக மொத்தம் 9 திசைகளும், ஒருவருக்கு நடைபெற்றால் 120 வருடங்கள் நடைபெறும்.

தசாபுத்தி சரியில்லாமல் இருக்கும் போது ஏற்பாடும் பாதிப்புகளைப் போக்க நம்முடைய நட்சத்திர கோவிலுக்கு சென்று வணங்கலாம். திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் 27 நட்சத்திரங்களுக்கு தனித் தனி லிங்கங்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சென்று நம்முடைய பிறந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வணங்கலாம்.

அசுவினி

அசுவினி நட்சத்திரக்காரர்கள் அழகானவர், எல்லாருக்கும் பிரியமானவராக விளங்குபவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது.

பரணி

பரணி நட்சத்திரக்காரர்கள் உறுதியான மனப்போக்கும் படைத்தவர். சமத்தானவர், அதிகமான நோய்களுக்கு உட்படாதவர், ஞானம் பெற்றவர். செல்வங்களை அடைபவர். சுகங்களை விரும்புகிறவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.

கார்த்திகை

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல நண்பர்கள் உள்ளவர், புகழ் பெற்றவர், வலுவான உடல் பெற்றவர். நன்றாக சாப்பிடுபவர் ஆழமான மனம் கொண்டவர்.இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சத்தியம் தவறாமல் நடப்பவர். பிறர் பொருளை விரும்பாதவர். இனிதான வாக்கை உடையவர், புத்தியுள்ளவர். அழகான சரீர வாகு பெற்றவர், எவருக்கும் உணவளிக்கும் இரக்க மனம் பெற்றவர், இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

மிருகஷீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் சமர்த்தானவர். சதா சுற்றுவதில் விரும்பமுடையவர். வாக்கு சாதுரியமானவர், நினைத்ததை சாதிக்க எவ்வழிகளையும் நாடுகிறவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் எதையும் மறைக்கத் தெரிந்தவர். தன் காரியத்திலேயே சதா கண்ணாயிருப்பவர். சுயகர்வம் மிக்கவர். நன்றிக்கே பொருள் தெரியாதவர். கெட்டவர் சகவாசப் பிரியர், பிறரை வருத்தி ஆனந்திப்பவர், பாவங்களைச் செய்வர், அடிக்கடி காரணமில்லாமலே கோபம் கொண்டு பிறர் வெறுப்பைச் சம்பாதிப்பவர். இந்த நட்சத்திரக்காரர்கள் அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது.

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தவயோகம் நாடுபவர், சுகங்களை விருப்புபவர், நல்ல ஒழுக்கமாக நடப்பவர், மந்தமான புத்தியுள்ளவர், வினயம் மிக்கவர், நோயான சரீரம் உள்ளவர். அதிக தாகம் உடையவர். கடினமான வாக்கு உடையவர். புத்திசாலித்தனம் மிகுந்தவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாணியம்பாடியில் உள்ள அதிதீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

பூசம்

பூசம் நட்சத்திரக்காரர்கள் சாந்தமான மனப்போக்கினர். எல்லோராலும் விரும்பப்படுகின்றவர். பெற்றோரை அன்போடு ஆதரிப்பவர், குணசாலி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அட்சய புரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் புத்திமானாகவும் பலவானாகவும் இருப்பவர், சுகத்தில் ஆர்வம் மிக்கவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய பணக்காரர். பணியாட்கள் பலரை வைத்து வேலை வாங்குவார். தெய்வபக்தி, பிதுர்பக்தி மிகுந்தவர். சஞ்சாரப் பிரியர், மகா உற்சாகமாக இருப்பவர். அழகான தோற்றம் உள்ளவர், விவேகமானவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரரை வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது.

பூரம்

பூரம் நட்சத்திரக்காரர்கள் பிரியமாக பேசுகிறவர். தான குணம் மிக்கவர். சாந்தியுள்ளவர், அரச சேவகம் செய்வர், பணம் தேடுவதில் ஊக்கமானவர், எதிர்காலத்தை சரியாக அறிந்து நடப்பவர், வியாபாரங்களில் ஈடுபடுகிறவர், கடினமான வாக்கும், சஞ்சலமான சித்தமும் கொண்டவர். விலங்குகளுக்கு பிரியமானவர். இந்த நட்சத்திரக்காரர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் அனைவராலும் பிரியங்காட்டப் பெறுகின்றவர். வித்தையால் செல்வம் தேடிக் கொள்பவர். போகவானாக இருப்பவர். மனோ வியாதி இல்லாதவர், முன்கோபம் கொண்டவர், பொய் பேசாதவர், ஸ்ரானப் பிரியர், குறைந்த பசியுள்ளவர், ஞானமான மனமுள்ளவர். இந்த நட்சத்திரக்காரர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது.

ஹஸ்தம்

ஹஸ்தம் நட்சத்திரக்காரர்கள் உற்சாகமாக இருப்பவர், தைரியமான மனத்தினர், புத்தியுள்ளவர், அழகான உடலுள்ளவர், பிற்காலத்தில் பெரும் செல்வம் பெறுகிறவர். குருபக்தி உடையவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் கோமல் என்ற ஊரில் உள்ளது.

சித்திரை

சித்திரை நட்சத்திரக்காரர்கள் பலவிதமான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புகிறவர், சுகமான கண் பார்வை கொண்டவர், நல்ல குணம் உள்ளவர், சஞ்சாரப் பிரியர், தாமதமான புத்தியினர், உறுதியான பேச்சியுடையவர், சிக்கனமானவர், வல்லமையும் பரிவும் உள்ளவர், மிகுந்த பாசமானவர், நம்பிக்கைக்கு உரியவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில்.

சுவாதி

சுவாதி நட்சத்திரக்காரர்கள் அறிவுக் கூர்மை பெற்றவர், நல்லயோகம் உள்ளவர், வியாபாரத்தில் விருப்பமுடையவர், தயாளமானவர், பிரியமான பேச்சு பேசுகின்றவர். தாமதபுத்தி படைத்தவர், அரசாங்க பணி செல்வோர், வித்துவாசம் பெற்றவர், தாய் தந்தைக்கு எப்போதும் இனிமையானவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாத்திரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது.

விசாகம்

விசாகம் நட்சத்திரக்காரர்கள் பொறாமை கொள்பவர், சாந்தியுள்ளவர், உரையாடலிலே சமர்த்தானவர், கலகப் பிரியர், முன்கோபம் கொண்டவர், சொல் தெளிவற்றவர், சேவை செய்யும் பண்புள்ளவர், கவலைப்படாமல் மனதை வைத்திருப்பவர், தெய்வ பக்தி உள்ளவர், படை வீரரை போல் நடந்து செல்பவர். இந்த நட்சத்திரக்காரர்கள், முத்துக்குமாரசாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் செங்கோட்டை திருமலைக்கோவிலில் உள்ளது.

அனுசம்

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் நல்ல ஞானியாக விளங்குபவர், பிறதேசங்களில் வாசம் செய்பவர், பசி பொறுக்காதவர், பெரியோரை போற்றகிறவர், தாம்பூலம் பிரியர், செல்வம் உள்ளவர், கடைக்கண் சிவந்தவர். பெண்களால் விரும்பப்படுகிறவர். மயிரழகு பெற்றவர். பெற்றோரை ஆதரிப்பவர், யானை புத்தி பெற்றவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது.

கேட்டை

கேட்டை நட்சத்திரக்காரர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர், தர்மவானாக விளங்குகின்றவர், அதிகமான கோபமுள்ளவர், பொய் பேசுகிறவர், பொய்யையும் அடித்துப் பேசி மெய்யாகப் பிறரை நம்பவைக்கும் சக்தி பெற்றவர். கடினமான வாக்கு உள்ளவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது.

மூலம்

மூலம் நட்சத்திரக்காரர்கள் கர்வமானவர், சுகமான வாழ்வை விரும்புகிறவர், வசீகரமானவர். ஸ்திரமான புத்தியுள்ளவர், போகப் பிரியர், நித்திரைப் பிரியர், சிறந்த தவயோகம் பெற்றவர், சிக்கனமானவர். கல்விமான், உறவினர்களோடு நெருங்காதவர், முன்கோபக்காரர், இந்த நட்சத்திரக்காரர்கள் மப்பேடு என்ற ஊரில் உள்ள சிங்கீஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடலாம்.

பூராடம்

பூராடம் நட்சத்திரக்காரர்கள் விருப்பம்போல் அமைந்த வாழ்க்கைத் துணையைப் பெற்றவர். மானஸ்தன், கர்வமுள்ளவர், பல நண்பர்களை உடையவர், தந்திரமான தோற்றத்தினர், பொய் பேசாதவர், சஞ்சாரப் பிரியர், பெண்களுக்கு இனியவர், செல்வம் உள்ளவர். இந்த நட்சத்திரக்காரர்கள் காடுவெளி என்ற ஊரில் உள்ள ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வணங்கலாம்.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் புத்திக் கூர்மை படைத்தவர். நல்லொழுக்கம் உள்ளவர், சகலருக்கும் வேண்டியவர், தாய் தந்தையருக்கு விருப்பமுள்ளவர், வலுவான தேகம் பெற்றவர், பலமானவர், புத்தி மிகுந்தவர், நல்ல சொற்களை பேசுபவர், போசனப் பிரியர், பக்திமான், பகையை வஞ்சம் தீர்க்கும் உறுதியுள்ளவர், பிறர் பொருளை விரும்பாதவர், கம்பீரமாகப் பேசுகிறவர், தியாக மனம் பெற்றவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சீமானாக விளங்குபவர். கம்பீரமான தோற்றமும், பெண்களால் நேசிக்கப்படுகிறவர், வாசனைப் பொருளை நேசிப்பவர், உற்சாகமானவர், இந்த நட்சத்திரக்காரர்கள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரத்தனமானவர், தானம் செய்ய விரும்புகிறவர், திறமையானவர், அச்சமற்றவர், பிறர் பேச்சைக் கேளாதவர், போசனப் பிரியர், பெண்களுக்கு வேண்டியவர், பெரியோர்க்கும் வேண்டியவர். இவர்கள் கொருக்கை என்ற ஊரில் உள்ள பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சத்தியவாதியாக இருக்க விரும்புவார்கள். சதா கவலைப்படுபவர், விரோதிகளை வெல்பவர், சாகசமாகப் பேசி பழகுகிறவர், புத்திசாலி, கைகளால் வலுத்தவர், ஆட்சியாளருக்கு இனியவர், பேசுவதில் வல்லவர், நீராடலில் பிரியமுள்ளவர். இந்த நட்சத்திரக்காரர்கள் திருப்புகலூர் என்ற ஊரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பெண்கள் வழியில் தன வருமானம் பெறுகிறவர், வாய்ஜாலம் மிகுந்தவர், தெய்வபக்தி உடையவர், கல்விமானாகத் திகழ்பவர். இந்த நட்சத்திரக்காரர்கள் ரங்கநாதபுரம் என்ற ஊரில் உள்ள திருவானேஷ்வர் திருக்கோவில் சென்று வழிபட வேண்டும்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய் சொல் வீரர். தர்மசீலர், புத்திசாலி, பெண்கட்கு இனியவர், சாதுரியம் மிகுந்தவர், பொய் பேசுகிறவர், மற்றவர்களுக்காக பணி செய்வோர், நல்லவர்களால் விரும்பப்படுகிறவர், இந்த நட்சத்திரக்காரர்கள் தீயத்தூர் என்ற ஊரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சர்வஜனப் பிரியராக இருப்பவர், எழிலானவர், சூரத்தனம் மிகுந்தவர். குணமுள்ளவர், சாதுரியமான பேச்சினை உடையவர், சிநேகம் மிகுந்தவர். நிலையில்லாத செல்வத்தைக் கொண்டவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருச்சியிலிருந்து முசிறி சென்று அங்கிருந்து காருகுடி என்னும் இடத்தில் உள்ள கயிலாயநாதர் ஆலயத்திற்கு சென்று வணங்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.