சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிடுவதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளில் இருந்தே கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனுவாசனுக்கும், கமல் ஹாசனுக்கும் இடையே வாக்கு சேகரிப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கலா மாஸ்டர், கெளதமி, ராதா ரவி என நட்சத்திரங்கள் தினமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான தேர்தல் களமாக இல்லாமல் வேட்பாளர்கள் வித்தியாச, வித்தியாசமான டெக்னிக்குகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இன்று கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகம் கலாச்சாரமும், கடவுள் நம்பிக்கையும் உள்ள பூமி, இங்க கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி நீங்க எப்படி ஓட்டு போட முடியும். அதனால் மக்களாகிய நீங்கள் உங்களுடைய உள்ளூர் சகோதரிக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். கோவையில் தாமரை மலரும். தமிழகத்தில் தாமரை வளரும். மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க. தாமரை மலரும். தமிழ்நாடு வளரும் என பஞ்ச் டைலாக் எல்லாம் பேசி தொண்டர்களை கவர்ந்தார்.