வேட்புமனு தாக்கலின்போது பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.கவினரை எதிர்த்து டிராபிக் காவல் உதவி ஆய்வாளர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சேலம் டி.ஐ.ஜி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான சின்னதுரை, தனது கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஆத்தூர் பேருந்து நிலையம் வழியாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
இதன் போது சில நிர்வாகிகள் பேருந்து நிலையம் அருகே கடந்து செல்ல முயற்சிக்கவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ரவி, இந்த வழியில் செல்ல கூடாது என்றும், வேட்பாளர்களுடன் சிலர் மட்டும் இப்பகுதி வழியாகச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் காவல் உதவி ஆய்வாளர் ரவிக்கும், திமுக உடன்பிறப்புகளுக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில், கோபமடைந்த உதவி காவல் ஆய்வாளர் ரவி பேரிக்கார்டை இழுத்து வந்து சாலையில் வைத்துள்ளார்.
ஆத்திரமடைந்த திமுக தொண்டர்கள் ரவியை இடித்து தள்ளி வேகமாக செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த ரவி தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து சேலம் டி.ஐ.ஜி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.