இன்னும் ஒரு வருடத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டண வசூல் அமலுக்கு வரும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் வரை பாஸ்டேக் முழுமையாக அமல்படுத்தாத நிலையில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலை தடுக்கும் வகையில் பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் ஒரு வருடத்தில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் முறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போது 93% வாகனங்கள் பாஸ்டேக் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டன. மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாஸ்டேக் முறையும் அகற்றப்பட்டு ஜி.பி.எஸ் வழியாக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இமேஜிங் முறையில் பணம் பெறப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த முறையை அமல்படுத்த ஒரு ஆண்டாகும் என தெரிகிறது.
அதே நேரத்தில் பாஸ்டேக் எடுக்காத 7 சதவீத வாகன ஓட்டிகள் பாஸ்டேக்கை பெற வேண்டும் என்றும், அவர்கள் குறித்து விசாரிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாஸ்டேக் பொருத்தாவிட்டால், ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.