Type Here to Get Search Results !

திமுக வேட்பாளரான டாக்டர்.எழிலனை எதிர்த்து குஷ்பூ போட்டி

 

1980 களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்த குஷ்பூ, 2013 ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்துள்ளார். சில டிவி சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். டிவி சேனல்கள் சிலவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.

1995 ம் ஆண்டு முறைமாமன் படத்தில் நடித்த போது குஷ்பூவிற்கும், அந்த படத்தின் டைரக்டர் சுந்தர்.சி.,க்கும் இடையே காதல் ஏற்பட்டது. 2000 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

2010 ல் அரசியலுக்கு வந்த குஷ்பூ, திமுக.,வில் இணைந்தார். பிறகு அந்த கட்சியில் இருந்து விலகிய குஷ்பூ காங்கிரசில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

பிறகு அங்கிருந்து விலகிய குஷ்பூ, 2020 ல் பாஜக.,வில் இணைந்தார்.


ஆயிரம் விளக்கில் போட்டி

பாஜக.,வில் இணைந்த சில மாதங்களிலேயே குஷ்பூவிற்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது. அதுவும் திமுக.,வின் கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் வழங்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளரான டாக்டர்.எழிலனை எதிர்த்து குஷ்பூ போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பூ, திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தான் பல சவால்களை வாழ்க்கையில் கடந்து வந்தவர் எனவும், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை என மனம் நெகிழ்ந்து பேட்டி அளித்தார்.

சுந்தர்.சி உடன் வரலையே

காதலர் தினம், காதலை சொன்ன தினம், திருமண நாள், கணவரின் பிறந்த நாள் என ஒவ்வொரு நாளிலும் இன்ஸ்டாகிராமில் தனது காதல் கணவரை மிகவும் புகழ்ந்து, ரொமான்டிக் பதிவுகளை வெளியிடுபவர் குஷ்பூ. ஆனால் அவர் முதல் முறையாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது உடன் கணவர் சுந்தர்.சி வரவில்லை. தனது வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உடன் இருப்பவர் என குஷ்பூ பெருமையாக சொல்லிக் கொள்ளும் சுந்தர்.சி வராதது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சுந்தர்.சி.,க்கு பிடிக்கவில்லையா

குஷ்பூ பாஜக.,வில் இணைவதற்கு சுந்தர்.சி., தான் காரணம் என போபண்ணா சொன்னதையே சுந்தர்.சி மறுத்தார். ஆனால் சமீபத்தில் சுந்தர்.சி, பாஜக மாநில தலைவர் எல்.முருகனை சந்தித்தார். இதனால் அவரும் பாஜக.,வில் இணைய போவதாக தகவல் பரவியது. ஆனால் தற்போது குஷ்பூ வேட்புமனு தாக்கல் செய்ய சுந்தர்.சி., வராததால், குஷ்பூ தேர்தலில் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாஜக தலைவர்களை சுந்தர்.சி சந்தித்ததற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.