தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள போதும், பொதுத்தேர்வு காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடையில் தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக 12ம் வகுப்பு ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக ஏப்ரல் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் செய்முறை தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்தும் தமிழக அரசு 23 வழிமுறைகளை வெளியிட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் முடிந்த கையோடு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தன்னுடைய அறையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தேர்வு துறை இயக்குநர் உஷா ராணி ஆகியோருடன் கிட்டதட்ட ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு தேதியை மாற்றி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாற்று தேதியுடன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று கூறப்படுகிறது.