Type Here to Get Search Results !

மும்பை பங்குச்சந்தையில் இன்று… 9 லட்சம் கோடி இழப்பு… முதலீடுகள் வெளியேற்றம்….

 

மும்பை பங்குச்சந்தையில் இன்று முதலீட்டாளர்களுக்கு மிகவும் மோசமான வர்த்தக நாளாக அமைந்துள்ளது. வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்தில் சென்செக்ஸ் 1300 புள்ளிகள் வரையில் சரிந்து சுமார் 6.5 லட்சம் வகையிலான சந்தை முதலீட்டைச் சந்தை முதலீட்டாளர்கள் இழந்தனர்.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை துறையைப் பெரிய அளவில் பாதிக்கும் எனக் கணிப்புகள் நிலவி வருகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

இதன் எதிரொலியாக அன்னிய முதலீட்டாளர்கள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இன்றைய மோசமான சரிவின் காரணமாக முதலீட்டாளர் 2020 மார்ச் சரிவை போல் மீண்டும் மாபெரும் சரிவை இந்தியா எதிர்நோக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மும்பை பங்குச்சந்தை

இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் காலை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்தது. இதன் பின்பும் தொடர் சரிவின் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 3.7 சதவீதம் வரையில் சரிந்தது. இந்த மாபெரும் வீழ்ச்சியில் முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

3.44 சதவீத சரிவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,707.94 புள்ளிகள் சரிந்து மொத்தம் 3.44 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தக முடிவில் 47,883 புள்ளிகளை அடைந்து வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

டாப் 30 நிறுவனங்கள்

மேலும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று வங்கி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை பதிவு செய்துள்ளது. இதில் குறிப்பாக இண்டஸ்இந்த் 8.6 சதவீதம் வீழ்ச்சி, பஜாஜ் பைனான்ஸ் 7.39 சதவீதம், எஸ்பிஐ வங்கி 6.87 சதவீதம் என மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.

ஐடி துறை வீழ்ச்சி

கடந்த வாரம் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்க ஐடி துறையும், இன்று சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய 1 சதவீதம் முதல் 3.3 சதவீதம் வரையில் சரிவை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி நிறுவனம் மட்டுமே 4.83 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

நிப்டி குறியீடு

இதைத் தொடர்ந்து நிப்டி குறியீடு சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே தொடர் சரிவை பதிவு செய்த காரணத்தால் அதிகளவிலான சரிவடைந்தது. இதன் மூலம் வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 524.05 புள்ளிகள் வரையில் சரிந்து 14,310.80 புள்ளிகளை அடைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.