நாட்டில் நாள்தோறும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்தாலும், ஒரு போதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக பொதுமுடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தாது என்றும், மக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடுவதைத் தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள்தான் பிறப்பிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் அதனைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று மோசமான நிலையில் இருந்தாலும், பெரிய அளவில் கடந்த காலத்தைப் போல பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று கூறினார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதாவது, பரிசோதனையை அதிகரிப்பது, நோய் பாதிப்பைக் கண்டறிதல், உடனடி சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்துதல், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடத்தை விதிகளை அதிகரித்தல் ஆகியவற்றை செயல்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார்.