தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட உடன், தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து படிப்படியாக குறைத்தோம். தொற்று பரவலை கட்டுப்படுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. மேலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர் குழு உடன் ஆலோசித்து பரவலை படிப்படியாக குறைத்தோம்.
இந்தியா முழுவதும் குறைந்து வந்த கொரோனா நோய் தொற்று மார்ச் மாதத்தில் பன்மடங்கு அதிகரித்தது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 400, 450 என தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று (ஏப்.,11) சுமார் 6,618 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இந்த தொற்று கூடுதலாக கண்டறியப்பட்டுள்ளது.
மாநில அளவில் கொரோனா மருத்துவமனைகளிலும், கொரோனா சிறப்பு மையங்களிலும் 80,284 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 32,102 படுக்கைகளும் ஐசியு வசதி கொண்ட 6,997 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 10ம் தேதி வரை 37.8 லட்சம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது உயிரிழப்பு விகிதம்1.38 சதவீதமாகவும், குணமடைபவர்களின் விகிதம் 94.12 சதவீதமாகவும் உள்ளது.
சென்னையில் 150 முதல் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வரும் நிலையில், 400 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னை மற்றும் பிற மாநகரப் பகுதிகளில் தற்காலிக பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூடும்போது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சி கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றி, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.