அனைத்து மாநில ஆளுநா்களுடன் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் புதன்கிழமை (ஏப்.14) கலந்துரையாட உள்ளனா்.
காணொலி வழியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கியிருக்கிறது. தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1.60 லட்சமாக பதிவாகியுள்ளது.
இந்த நிலைமையை சமாளிப்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நான்கு நாள் தடுப்பூசி திருவிழா திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 30 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், நாடு முழுவதும் இதுவரை 10.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் சராசரியாக ஒரு நாளில் செலுத்தப்படும் தடுப்பூசி எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்து, உலக அளவில் விரைவாகத் தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.
இதை மேலும் விரிவுபடுத்தி, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாநில ஆளுநா்களுடன், குடியரசுத் தலைவரும் பிரதமரும் புதன்கிழமை ஆலோசனை நடத்த உள்ளனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமும், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும் மத்திய, மாநில அரசுகளை கவலையடையச் செய்துள்ளன. எனவே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடுப்பூசி திருவிழா குறித்து ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.