Type Here to Get Search Results !

மம்தாவின் ஆட்டம் முடியப் போகிறது…. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி பேச்சு

 

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் ஆட்டம் முடியப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மேற்கு வங்க மாநிலம் பர்தமான் பகுதியில் பாஜக சார்பில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நான்குகட்ட வாக்குப் பதிவில், மக்கள் பல பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஆனால், இத் தேர்தலில் பாஜக ஏற்கெனவே தனது சதத்தை நிறைவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் அகற்றப்படும்.

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைவார். அவரின் ஆட்டம் முடியப் போகிறது. மே 2-ஆம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்றார்.

நாடியா மாவட்டம், கல்யாணியில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் மோடி பேசியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், தலித்துகளை பிச்சைக்காரர்கள் எனக் கூறி கொச்சைப்படுத்துகின்றனர். மம்தாவின் ஆதரவு இல்லாமல், அவரது கட்சியினர் இத்தகைய கருத்துகளைக் கூற முடியாது. ஆட்சேபகரமான இத்தகைய கருத்துகளைக் கூறிய தமது கட்சியினரை முதல்வர் மம்தா கண்டிக்கவில்லை. அதற்காக அவர் வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் மம்தா மிகப் பெரிய தவறு செய்துவிட்டார். தலித்துகளை அவமதித்ததன் மூலம் அவர் பெரும் பாவம் செய்துவிட்டார்.

மம்தாவின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உங்கள் (மம்தா) கோபத்தை வெளிப்படுத்த விரும்பினால், அதை என் மீது பிரயோகம் செய்யுங்கள். ஆனால் மேற்கு வங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம்.

கூச்பிஹாரில் கடந்த 10-ஆம் தேதி நடந்த வன்முறையின் பின்னணியில் மம்தா பானர்ஜி உள்ளார். அங்கு மத்திய படைகளுக்கு எதிராக மக்களை அவர் தூண்டிவிட்டார். வன்முறையைத் தடுக்க சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழக்க நேரிட்டது.

மேற்கு வங்கத்திற்கு வந்த துணிச்சலான பிகார் போலீஸ் அதிகாரி அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலைக் கண்ட அதிர்ச்சியில், அவரது தாயாரும் இறந்துவிட்டார். அந்த அதிகாரியின் தாய் உங்களுக்கு (மம்தா) தாய் மாதிரி இல்லையா? நீங்கள் (மம்தா) எவ்வளவு இரக்கமற்றவர் என்பது இங்குள்ள எந்த ஒரு தாய்க்கும் தெரியாது.

வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். ஆனால் மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க உங்களுக்கு (மம்தா) அதிகாரம் கிடையாது.

மேற்கு வங்க மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க இரட்டை என்ஜின் கொண்ட அரசு அதிகாரத்திற்கு வர வேண்டும். அதற்காக, தேர்தலில் அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.