தமிழகத்தில் வி.ஐ.பி., தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது, கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் தொகுதி. இந்தத் தொகுதியில், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி, மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில் உள்ளூர் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. காங்கேயத்தைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி, இங்கு நிறுத்தப்பட்டார்.
முதலில் அமைச்சர் வேலுமணி எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த நாட்களில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனாலும் அமைச்சர் வேலுமணி வெற்றி பெறுவார் என்றே கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது. அதன்படியே, இன்று காலையில் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கையில் மட்டுமின்றி, அடுத்தடுத்த சுற்றுக்களிலும் அமைச்சர் வேலுமணியே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது சுற்றில், அமைச்சர் வேலுமணி 10 ஆயிரத்து 824 ஓட்டுக்கள் பெற்று, 5575 ஓட்டுக்களில் முன்னிலை பெற்றுள்ளார். அடுத்தடுத்த சுற்றுக்களில் இந்த வித்தியாசம் அதிகமாகும் என்று அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளின் ஓட்டுக்கள் எண்ணப்படும்போது இந்த வித்தியாசம் குறையுமென்ற நம்பிக்கையில் தி.மு.க.,வினர் இருக்கின்றனர்.