Type Here to Get Search Results !

தனி அதிகாரம்..! ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..! எடப்பாடியார் நிலை..! அதிமுகவில் அடுத்தது என்ன….?

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இனி தன் வழி தனி வழி என்கிற முடிவிற்கு வந்துள்ளதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் காட்டுகின்றன.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நீண்ட இழுபறிக்கு பிறகே அறிவிக்கப்பட்டார். முதலில் எடப்பாடி பழனிசாமியை ஏற்க தயக்கம் காட்டிய ஓபிஎஸ் பிறகு ஒரு வழியாக ஏற்றுக் கொண்டார். இதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு தொடர்பான முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியே எடுத்தார். கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடங்கி வேட்பாளர் தேர்வு வரை எடப்பாடியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. தென் மாவட்டங்கள் மற்றும் சில தொகுதிகளில் மட்டுமே ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுக்க முடிந்தது.
ஆனால் தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரும்பாலானவர்கள் தோல்வியை தழுவினர். அதிலும் ஓபிஎஸ் பொறுப்பில் இருந்த தென் மாவட்டங்களில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. மதுரையில் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும்படியான வெற்றி அதிமுகவிற்கு கிடைத்தது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வகித்த கொங்கு மண்டலம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற வட மாவட்டங்களில் அதிமுக எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் சுமார் 66 எம்எல்ஏக்களுடன் அதிமுக வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் ஸ்டாலினை எதிர்கொள்ளப்போகும் எதிர்கட்சித்தலைவர் யார் என்கிற கேள்வி அதிமுகவில் எழுந்துள்ளது. இந்த எதிர்கட்சித்தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ இருவருமே போட்டியிட்டு வருகின்றனர். அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு என்கிற வகையில் எடப்பாடி பழனிசாமியே எதிர்கட்சித்தலைவருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்றாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியின் அடிப்படையிலும் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுத்ததாலும் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் குறி வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது. இதுநாள் வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிடுவதே வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற லெட்டர் பேடுடன் ஓபிஎஸ தனியாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பு அம்மா உணவகம் திமுகவினரால் தாக்கப்பட்ட போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயருடன் தான் அறிக்கை வெளியானது. ஆனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தன் வழி தனி வழி என்பது போல் தனியாக அறிக்கை வெளியிட்டு எதிர்கட்சித்தலைவருக்கான பணிகளை ஓபிஎஸ் துவங்கியது போல் தெரிகிறது. அதே சமயம் தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். தோல்வியில் இருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை என்கிறார்கள். ஆனால் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், தேர்தலில் வென்றி அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடியை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி பெரிய அளவில் பேசுவதில்லை என்கிறார்கள். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்புகள் சில நிமிடங்களில் முடிந்துவிடுவதாக சொல்கிறார்கள். ஆனால் அதிமுகவை முழுமையாக தன் வசம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி களம் இறங்கக்கூடும் என்றும் அதற்கான தருணத்திற்கு அவர் காத்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார். தருணம் வரும் வரை எடப்பாடியார் கப்சிப் என்று தான் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.